Dienstag, Dezember 21, 2010

எழுதுவதற்கு எதுவுமில்லை -3
















3.



„உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!“ என்று பாரதி சொன்னது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் செயலளவில் அது சாத்தியமாகாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதே! மனிதன் உடல்வளர்ப்பதற்காக நாளாந்தம் பலியிடும் உயிரினங்களின் எண்ணிக்கையின் முன்னால் இந்த வார்த்தைகள் மதிப்பிழந்து போய்விடுகின்றன.
„சரி! நாங்கள் கொல்லாமல் விடலாம். ஆனால் இயற்கையின் நியதியில் ஓர் உயிர் இன்னோர் உயிரை அழித்துத்தானே தன் உடல் வளர்க்கிறது. எப்படியோ அழியப்போகும் அந்த உடல் எமக்காக அழிந்துபோவதில் என்ன தவறு இருக்கமுடியும்?“ என்பது மாமிசம் புசிப்போரின் வாதம்.


தன் உடல்வளர்க்க பிற உயிரினங்களையும், தன் சுகத்துக்காக பிற மனிதனையும் கொல்வதில் தவறில்லை என்ற ஒரு தவறான பாதையைத் தேர்ந்துகொண்டு அதன்வழியே நடைபோட்டுக்கொண்டிருக்கிறது மனித சமுதாயம். ஆனால் இந்தச் சமுதாயத்தில்தான் மிருகவதைக்கு எதிராகவும், மனித உரிமைக்காகவும் என்று குரல்கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஓரளவுக்கேனும் ஆறுதல் தருகிறது.




ஆடு,மாடு,கோழி,நாய்,பூனை என்று பலரது வீடுகளிலும் வளர்ப்புப் பிராணிகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. உண்மையான அன்பு தன்னலம் இல்லாதது எனினும் உயிர்களிடத்தில் அன்பு பூணும் மனிதன் அவற்றால் விளையக்கூடிய நன்மைகளிலும் அதிக அக்கறை செலுத்துகிறான். தனக்கு நன்மையளிக்காத எந்த உயிர்மீதும் அவன் பரிவு காட்டுவதில்லை.


பயன்பாடு கருதி, பாசம் காட்டி ஒருவன் வளர்க்கின்ற அவனது வளர்ப்புப் பிராணிகளோடு பிராணியாய், அந்த வளர்ப்புப் பிராணிகளிலும் பார்க்க அதிக சுதந்திரத்தோடும் உரிமையோடும் அவனது வீட்டுக்கள் உலா வந்துகொண்டிருக்கும் ஒரு செல்லப் பிராணி-

எலி.!




பார்வைக்கு பரம சாது அது. ஆனால் எலியைக்காணும்போதெல்லாம் மனிதனுக்கு கிலிபிடித்து விடுகிறது.


„உன்னை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை!“ என்று கங்கணம் கட்டிக்கொண்டு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கிண்டிக்கிளறி, வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள் முதற்கொண்டு சகலதையும் தட்டிக்கொட்டிவிட்டுத் தேடியும் எலி அகப்படாமல் போன கோபத்தோடும் களைப்போடும் புஸ் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒருபக்கம் ஒய்ந்து உட்காரும்போது „உனது தாக்குதல்களுக்குத் தப்பிவிட்டேன் பார்!“ என்று மமதையோடு எங்காவது ஒரு மூலையில் நின்று இவனைப்பார்த்துப் பரிகசிக்கும் அது.


பள்ளிக்கூடம் போய் „படம்பார் பாடம் படி!“ என்று புத்தகங்களிலுள்ள படங்கள் மூலமாகவே நமக்குத் தெரியாத பலவற்றையும் அறிந்துகொள்ளும் பருவத்தில்தான் எலியையும் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். பிறகு கோயிலில் பிள்ளையாரின் வாகனமாகக் காட்சி தந்தது அது.
உயிருள்ள ஒரு எலியை நான் மிக நெருக்கமாகப் பார்த்தது, எங்கள் வீட்டில் எலித்தொல்லை தாங்காமல் அப்பா வாங்கிவைத்த எலிப்பொறியில் சுட்ட தேங்காய்த் துண்டை தின்ன வந்து மாட்டிக்கொண்ட எலியைப் பார்த்துத்தான். பொறியில் மாட்டிக்கொண்டாலும் அது உயிர் பிழைத்திருந்தது. அதைக் கொல்வதற்கு அப்பாவுக்கோ அம்மாவுக்கோ விருப்பமில்லை. „கொண்டுபோய்த் தூரத்தில் போட்டு விட்டு வா!" என்று அவர்கள் சாக்குப் பைக்கள் அதைப்போட்டுத்தர தூரத்தில் இருந்த கடற்கரையோரமாய் அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டேன். எப்படியாவது தப்பிப் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அந்த ஓர் எலியைப் பிடித்துவிட்டதால்மட்டும் எங்கள் வீட்டில் எலித்தொல்லை தீரவில்லை. குஞ்சு குருமான்களோடு எலிக்குடும்பம் ஒன்று வாடகையில்லாமல் எங்கள் வீட்டில் குடியேறிப் பொலிந்தது.


வளவுக்குள் உலாத்திக் கொண்டிருந்த சாரைப்பாம்பு ஒருநாள் எங்கள் வீட்டு முகட்டில் வந்த ஒட்டிக் கொண்டிருந்தது
„பாம்பு பாம்பு!“ என்று பயந்தோடியபோது அப்பா அமைதியாகச் சொன்னார்:„இனி எலித்தொல்லை குறைஞ்சிடும்!“




எலியை விரட்டுவதற்காக பாம்பு வந்து வீட்டில் குடியேறியும் பயப்படாத அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தேன்.


„எலிக்குப் பதிலாய் பாம்பு இருந்தால் அது நல்லதா?!“


„எலியைப் போல பாம்பால் அதிக உபத்திரவம் இல்லை!“


„ஆனால் அது ஒரே போடாகப் போட்டு ஆளை முடித்திடும்!“


„அது நல்லபாம்பு கடித்தால்தான். இது சாரைப் பாம்பு லேசிலை கடிக்காது!எலிகளையெல்லாம் பிடித்தபிறகு பாம்பை விரட்டிவிடலாம்!“


எனக்கென்னவோ அப்பாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.இப்பிடிப் பாம்பு வந்து குடியேறுகிறதைவிட எலியோடேயே நாங்கள் இருந்திடலாம்!என்று எனக்குப் பட்டது.


எலிகள் இந்த மனிதருக்கு அப்படி என்ன பெரிய தீங்கு செய்துவிடும்?தானியங்களை ,உடுபுடவைகளை, காகிதங்களை என்று எல்லாவற்றையும் அரித்துத் தள்ளிவிடும் போதாக்குறைக்கு எலிக்காய்ச்சலைவேறு பரப்பிவிடும். சொத்துக்களை அழித்தால் பரவாயில்லை. மனிதர்களையே அழிக்கும் நோய்களைப் பரப்பினால் எவர்தான் தாங்கிக்கொள்வார்கள் அதனால்தான் இந்த எலிமீது மனிதனுக்கு கடுங்கோபம்!
யார் என்ன விளக்கம் சொன்னாலும் எலிகள் பாவம் என்ற எண்ணமே என்மனதில் நிலையாகியிருக்கிறது.




பிள்ளையாருக்கு முன்னால் பரவிக்கிடக்கும் பட்சணங்களின் முன்னே உட்கார்ந்தும் அவைகளைப் பற்றி அக்கறைப்படாமல் பிள்ளையாரை வணங்கிக்கொண்டிருக்கிறதே ஓர் எலி. அதைப்பார்த்தால் கொடுமைசெய்யும் பிராணியாகவா தெரிகிறது சொல்லுங்கள்.?!