Freitag, Dezember 10, 2010

எழுதுவதற்கு எதுவுமில்லை?! -1

























1.


ம்.ம்..ம்....


பெரும்பாலும் மௌனத்திலேயே தொலைந்துபோகிற பொழுதுகள்.

"பேசாதே! செய்!" என்பதுதான் பெரும்பாலான இலட்சியவாதிகளின் கொள்கை.

ஆனால் பேசாமலேயே எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடிகிறதா?மேடைபோட்டு, ஒலிவாங்கிகளைக் கைகளில் பற்றிக்கொண்டு „இதுதான் நான்... அதுதான் நான்...“ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய காரியங்களைக் காற்றிலே பறக்கவிட்டுவிட்டுத் தேய்ந்துபோகிறார்கள். பிறகு மெள்ள ஓய்ந்துபோகிறார்கள்.


காலம் சிரித்துக்கொண்டிருக்கிறது.

மனிதர்கள் சிரிப்பதை மறந்து நெடுநாட்களாகிவிட்டன.

சூழ இருப்பவர்களின் சுகத்துக்காக உழைக்கிறேன் என்பவனும் அதில் வெற்றிகாணமுடியாமல் முகம் வெளிறிப் போகிறான்.தான் தன்சுகம் என்பவனும் அதில் சலித்துப்போய் இன்னும் இன்னும் என்று எதற்காகவோ ஏங்கிக் கொண்டிருக்கிறான்.


உலகம் தன்பாட்டில் வழக்கம்போல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

„இன்னும் எத்தனை காலத்துக்கு இது இப்படியே சுற்றப் போகிறது? இன்னும் கொஞ்சக்காலத்தில் இந்த உலகமும் இல்லாமல் போய்விடப் போகிறதாம்!“ என்று சில குரல்கள்.

„அதுவே உண்மையாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!“ என்பவர்கள் தம்முள் ஒருவகைத் திருப்தியை உணர்கிறார்கள். எவரையும் மிச்சம் வைக்காமல் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக இந்த உலகம் கரைத்துவிடும் என்பதில் உருவாகும் சுயநலத் திருப்தி அது.


தான் தன்சுகம் என்று தனித்து வாழ முனைபவனும் மற்றவர்களின்றி தான் வாழமுடியாது என்பதை உணரவைக்கிறது இயற்கை. எவருமில்லாத பூமியில் ஒருவன் தனியாக இருந்து எதைச் சாதித்துவிடப் போகிறான்.


தனித்துப் போகிறோம் என்று தவிப்புக் கொள்பவர்கள்தாம் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதே உண்மை.இந்தத் தவிப்பிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவே ஒருசிலர் நாய் பூனைகள் மீது பாசம் கொள்கிறார்கள் பராமரிக்கிறார்கள்.

சகமனிதன் மீது இல்லாத பாசத்தையும் பற்றுதலையும் தான் வளர்க்கும் சாதாரணமான ஒரு பிராணியின்மீது ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் இந்த மனப்பாங்கு எதைச் சுட்டுகிறது? சகமனிதன்மீது அவனுக்கிருக்கும் நம்பிக்கையீனத்தையே அது காட்டுகிறது.


மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்பது ஒருவர்மீது ஒருவருக்கு ஏற்படும் நம்பிக்கையே.எங்கே நம்பிக்கை தொலைகிறதோ அங்கே மகிழ்வு தொலைகிறது. வாழ்வு தொலைகிறது. தன்னைத் தான் உணர்ந்து தொலைந்த வாழ்வைத் தேடி மறுபடியும் மீட்டெடுப்பதற்குள் காலம் இவன் கண்களைக் கட்டிவிடுகிறது.





நேற்று மாலை ஆரம்பித்து இரவுமுழுதும் பொழிந்து கொண்டிருந்த பனிமழை இப்போதுதான் சற்று ஓய்ந்திருந்தது. வீட்டு வாசற்படிகளை நிறைத்திருந்த பனிக் கட்டிகளைத் தெருவுக்கு ஒதுக்கித்தள்ளும் முயற்சியில் நான்.


பக்கத்துவீட்டு மூதாட்டி தனது நாயுடன் தெருவில் இறங்கினாள்.

“காலைவணக்கம்!” சொல்லிக்கொண்டோம்.இந்த நடுங்கும் குளிரிலும் தனது நாயின் காலைக் கடன்களை முடிப்பதற்காக அதைக் கூட்டிக்கொண்டு அவள் புறப்பட்டிருந்தாள். அவளை முந்திக்கொண்டு அந்த நாய் முன்னால் நடந்து கொண்டிருந்தது.

இது நாளாந்தம் நடக்கும் காரியம் என்பதை முன்னே நான் தெரிந்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு என்னமோ ஊரில் என் வீட்டில் வளர்ந்து, நான் புறப்படும் முன் இறந்து போன என் வளர்ப்பு நாயின் நினைவு வந்தது. வீட்டைக்காப்பது அதன் கடமை என்று நினைத்து தினமும் அதற்கு சோறுபோட்டதையும், எப்போதோ ஒருநாள் அயல்நாய்களுடன் சண்டை போட்டுவிட்டு ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு வந்து என்னிடமும் ஒரு அடிவாங்கிவிட்டு, பிறகு அதன் காலுக்கு மஞ்சள்மாவும் நல்லெண்ணையும் கலந்து வைத்து வைத்தியம் பார்த்ததையும், எப்போதாவது ஓரிருமுறை அதன் முதுகையும் முகத்தையும் வருடிக் கொடுத்ததையும் தவிர அதனிடம் நான் அக்கறை செலுத்தியது அதிகமில்லை.ஆனால் அது என்மீது அதிகம் அன்பு வைத்திருந்திருக்கும்.அதனால்தான் நான் வீட்டைவிட்டுப் பிரியப் போகிறேன் என்று தெரிந்துகொண்டோ என்னமோ மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தன் உயிரைவிட்டு என்மூலம் தன் இறுதிக் கிரியைகளை முடித்துக் கொண்டது.




பிற உயிர்களிடத்தில் அன்பு பூணும் மனிதர்கள் உண்மையில் சக மனிதர்களிடத்தும் அன்பு மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சகமனிதர்களின் நடத்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும்போது அவர்கள் தனிமைச் சிறைக்குள் தள்ளப் படுகிறார்கள் தாங்களாகவே வலிந்து தமக்கு விலங்கிட்டுக் கொள்கிறார்கள்.காலப்போக்கில் அவர்கள் மனநோயாளிகளாகி விடுகிறார்கள்.


எப்போதும் ஒருவரைத் தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க அவர்களுக்கு ஒரு துணை தேவை. மனிதர்களில் அவர்களுக்குத் தக்க துணை கிடைக்காத போது நாய், பூனைகூட அவர்களைத் தனிமைச் சிறையிலிருந்து மீட்டெடுக்க உதவலாம்.


(இன்னும்...)



பிரசுரம்: வெற்றிமணி.




(வெற்றிமணி இதழில் தற்போது (2010) வெளிவந்துகொண்டிருக்கும் எனது கட்டுரைத்தொடரை உங்களுக்காக இங்கு மீள்பதிவு செய்கிறேன்)