Samstag, Juni 06, 2009

சிலருக்கு சிலது...










சிலருக்கு சிலது.
(நெடுங்கதை)


-இந்துமகேஷ்


ஒருமடமாதும் ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வுகலங்கி ஒழுகிய விந்து
ஊறுசுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறுதுளிமாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர்வளர்மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை
உதரமகன்று புவியில்விழுந்து
யோகமும் வாரமும் நாளும்அறிந்து-

மகளிர்கள் சேனை தர அணை ஆடை
மண்பட உந்தி யுதைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி

ஓர்அறிவு ஈர்அறிவு ஆகி வளர்ந்து
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து

மடியி லிருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடை மணியாடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு

தெருவில் இருந்து புழுதியளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே......

உயர் தரு ஞான குருவுபதேச
முந்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி அறுபதநீல


வண்டுஇமிர் தண்தொடை
கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழிவெறிந்து
மாமயில் போல் அவர்போவது கண்டு

மனது பொறாமல் அவர்பிறகோடி
மங்கல செங்கலசந் திகழ் கொங்கை
மருவ மயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி....
......................................

(பட்டினத்தார் பாடல்)









வீடு-1



இரவு மணி பதினொன்றரை.
இன்னும் தூங்கவில்லை!
படுக்கையில் உட்கார்ந்துகொண்டே கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் புவனா.
அவன் வரும்வரைக்கும் எப்படியாவது பொழுதை விரட்டியாகவேண்டும்.

அவன்...?
அவளது கணவன்!

அவன் எப்போது வருவான் எப்படி வருவான் என்று தீர்மானிக்க முடியாதபடி இப்போது கொஞ்ச நாட்களாக அவனது போக்கு முற்று முழுதாய் மாறி விட்டிருந்தது.

"எங்கை போயிருந்தனீங்கள் இவ்வளவு நேரமும்?"
"சும்மா...வெளியிலை பெடியளோடை புட்போல் அடிச்சிட்டு வாறன்!"
"நான் ஒருத்தி இங்கை தனிய இருக்கிறன் எண்ட நினைப்பு வரேல்லையா உங்களுக்கு?"
"நல்லகதை... உன்ரை நினைப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா நான்? ....என்ரை முகத்தை ஒரேயடியாப் பார்த்துக்கொண்டிருந்தா உனக்குப் போரடிக்கும்... அதுதான்!"
"நல்லாக் கதைப்பியள்!"
அவள் ஒரு செல்லச்சிணுங்கலுடன் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.

அவளுக்குப் பின்புறமாய் வளைந்து அவளது முதுகில் ஊர்ந்து இடக்கையால் அவளது இடையை வளைத்து வலக்கையில் அவளது முகத்தை ஏந்தி அவளது கழுத்தில் அவன் தனது உதடுகளை அழுத்தமாய்ப் பதிக்கும்போது அவனிடமிருந்து விலகியோட அவளால் முடிவதில்லை.

இதெல்லாம் கல்யாணமாகி ஒரு வருடம் வரைக்கும்தான்.
ஆனால்...இப்போது...?

அவளைப் பரிசோதித்த டொக்டர்கள் எல்லாம் உறுதிப்படுத்தியாகிவிட்டது.
அவள் தாய்மையடைய வாய்ப்பேதுமில்லை.
அதிர்ச்சி இருவருக்கும்தான். ஆனால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சோகம்.
அதுவும் வெளிநாட்டில்....!

என்னதான் உயிரைக்கொடுத்துப் பழகினாலும் நாங்கள் அன்னியர் அன்னியர்தான் என்று இந்த நாட்டுக்காரனை விட சொந்த நாட்டுக்காரனே தூரவிலகிநிற்கிற சொந்தங்கள்தான் இங்கே!

சும்மா மெல்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருக்குமா?
காதும் காதும் வைத்தாற்போல் கதைக்க தொலைபேசிகள் வேறு.

"ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதை... இவள் புவனராணிக்கு இனிப் புள்ளையே பிறக்காதாம்...டொக்டர்மார் சொல்லிப்போட்டினமாம்!...."
"மெய்யே...அவளைப்பற்றி நான் முன்னமே கேள்விப்பட்டனான்...ஊரிலை இந்தியன் ஆமி வந்திருக்கேக்கை அவளைக் கெடுத்ததாம்... வயித்திலை இருந்த பிள்ளையைக் கரைச்சுப்போட்டுத்தானாம் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பினவை.."
"பாவம் பரஞ்சோதி....விசயம்தெரியாமல் அவளைக் கட்டிற்றான்...இப்ப...?"
"பழிபாவம் சும்மாவிடுமே...புருசன்மாரை ஏமாத்திற பெண்சாதிமாரும் பெண்சாதிமாரை ஏமாத்திற புருசன்மாரும் ஒருக்காலும் நல்லா இருக்காதுகள்..."

-எல்லாவற்றையும் அருகிருந்து பார்த்தாற்போல் நேர்முகவர்ணனையாய் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்படும்.. கண்காது மூக்கு வைத்துக் கற்பனைகள் இரகசியமாக ஊருக்குள் உலாவரும்.
இவைகள் எதுவும் புவனராணிக்கோ பரஞ்சோதிக்கோ இன்னும் எட்டவில்லை.

நேரில் சந்திக்கும்போதெல்லாம் நிறைந்த அன்பை வார்த்தைகளில் பரிமாறிக் கொடுத்துவிட்டு முதுகுக்குப் பின்னால் முகத்தைச் சுளித்துக்கொண்டுபோகிற மனிதர்களின் முகமூடிகள் புவனராணிக்குத் தெரியாது.வெளுத்ததெல்லாம் பால் என்று இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிற குழந்தை உள்ளத்தின் சொந்தக்காரியாகவே அவள் இருந்தாள்.



வெளிக்கதவு திறந்து தாழிடப்படும் சத்தம்கேட்டது.
வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பிரித்தபடியே படுக்கையில் குப்புறப் போட்டுவிட்டு மெதுவாக எழுந்தாள் புவனராணி.

முன்னறைக்கு அவள் வந்தபோது பரஞ்சோதி குளியலறைக்குப் போயிருந்தான்.
போனவேகத்திலேயே தலையையும் முகத்தையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு திரும்பியவன் "துவாயை எடு!" என்றான்.
அவள் எடுத்துக்கொடுத்தாள்.

முகத்தைத் துடைத்துக்கொண்டே அவன் கேட்டான்.
"ஏன் இன்னும் முளிச்சுக்கொண்டிருக்கிறை...மணி பன்ரெண்டாச்சுதெல்ல...!"

இந்தக்கேள்வி அவளுக்குப் புதிதாக இருந்தது.
இதுவரைக்கும் அவன் எங்கேபோனான் என்ன செய்தான் என்ற கேள்வி அவள் வாயிலிருந்து வருவதற்குள் முந்திக்கொள்ள முயல்கிறானா?
அவள் கேள்வி எழுப்பவில்லை.
"நித்திரை வரேல்லை!" என்றுமட்டுமே சொல்ல முடிந்தது அவளால்.
"சாப்பிட வாங்கோவன்!"என்று அவள் அழைத்தபோது அவன் திருப்பிக் கேட்டான்-
"இன்னும் சாப்பிடவில்லையா நீ?"
"நீங்கள் வராமல்...."
"இந்தாப்பார்..இது யாழ்ப்பாணமில்லை...அங்கைகூட இப்ப ஒருத்தருக்காக ஒருத்தர் காத்துக் கொண்டிருக்கிறதில்லை....புருசன் சாப்பிட்டபிறகுதான் பெண்சாதி சாப்பிடவேணுமெண்டு அவசியமுமில்லை...அப்பிடி நான் உன்னட்டை ஒருக்காலும் சொன்னதுமில்லை... பசிக்கிறநேரம் சாப்பிட்டு நித்திரைவாற நேரம் கொண்டிரவேண்டியதுதான்...புருசன் பெண்சாதியெண்டாலும் சேர்ந்துதான் சாப்பிடவேணும் சேர்ந்துதான் படுக்கவேணும் எண்டு எந்தக் கட்டுப்பாடும் வெளிநாட்டுக்காரனிட்டை இல்லை...அதைப் பழகிக்கொள்ளவேணும் நாங்களும்!"
-பரஞ்சோதி மளமளவென்று சொல்லிக்கொண்டே போனான்.
வார்த்தைகளில் கொஞ்சம் கடுமை தொனித்தது.


இன்றைக்கு நிறைய வித்தியாசம்தான் இவனில்.
புவனராணி அவனை இமைகொட்டாமல் பார்த்தபடி நின்றாள்.அவனை எதிர்த்துப்பேசத் தோன்றவில்லை.
என்ன பேசுவது?

"சரி...உனக்குப் பசிச்சால் சாப்பிட்டிட்டு வந்து படு...எனக்குப் பசிக்கேல்லை...!"
-அவன் தன்பாட்டில் சொல்லிக்கொண்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்காதவன் போல் படுக்கையறைக்குப் போய் உடைமாற்றிக்கொண்டு இரட்டைப் படுக்கையில் ஒரு ஓரமாகச் சரிந்து கொண்டான்.

அடுத்தசில வினாடிகளில் அவனிடமிருந்து மெல்லிதாகக் குறட்டைச்சத்தம் எழ ஆரம்பித்தது.


புவனராணிக்குப் பசித்தது. சாப்பிட மனம் இடம்தரவில்லை.
தூக்கம் வந்தது. தூங்குவதற்கு மனம் இடம்தரவில்லை.
இதுநாள்வரையில்லாத புதிய பயம் ஒன்று அவள்மனத்தை இப்போது ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.


ஊரில் அமைதிகொள்ளவிடாமல் அடிக்கடி தாக்குதல் நடத்தும் ஆமிக்காரன்களாய் ஏதேதோ கெட்ட எண்ணங்கள் அவள் மனத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

அவன் மனத்தில் வேர் விடத்தொடங்கிய வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாய் இப்போது அவன்வார்த்தைகளில் தொனிக்கும் கடுமை அவளை நன்றாகவே தாக்கியிருந்தது.
விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தபின்னும் அவளது இமைகளை மூடிக்கொள்ளவிடாமல் தடுத்துநிற்கும் வேதனையோடு அவள் தன்னுள் போராடிக் கொண்டு கிடந்தாள்.


இல்லறம் என்னும் நல்லறம் தன்னில்இதயம் கலந்து உயிர்கள் இணைந்து ஈருடல் ஓருயிர் என்று மகிழ்ந்து......
இன்பமாய்த்தான் தொடங்கிற்று மணவாழ்வு. ஆனால் காலம்....அது எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது என்ற உண்மை அப்போது தெரியவில்லை.


இல்லற பந்தத்தில் இரண்டு உயிர்களை இணைத்துவைக்க முயலும் சமூகம் அவ்விருவரின் நல்ல தன்மைகளை மட்டுமே ஆராய்ந்து பார்க்கிறது.
ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணம் என்ற அர்த்தத்தில் இருவருடைய குறைபாடுகளையும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தாலிக் கயிற்றால் முடிச்சுப்போட்டுவிடுகிறது. நாளாக ஆக ஒருவர் குறை ஒருவருக்குத் தெரிய வர ஒன்றுபடவேண்டிய உள்ளங்கள் இரண்டுபட்டுப் போகின்றன. ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ள முடியாமல் ஒத்துப்போக முடியாமல் மனத்துக்குள் புகைந்துகொண்டு தமது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டவர்கள் அனேகம்.
அந்த வரிசையில் இப்போது புவனாவும் பரமும் வந்தாயிற்று.

ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது தாங்கள்மட்டுமே உலகம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.தங்கள் உறவுக்குச் சாட்சியாய் ஒரு மழலைவேண்டும் என்று மனம் விருப்பம் கொள்ளும்போது இருக்கின்ற உறவில் ஒரு இடைவெளி வருகிறது.தங்கள் விருப்பத்துக்குத் தடையாய் இருக்கிற எல்லாவற்றையுமே அவர்கள் வெறுக்கத் தயாராகி விடுகிறார்கள். தங்கள் துணை உட்பட.


இத்தனை சீக்கிரமாக பரஞ்சோதியின் மனதில் ஒரு மாற்றம் ஏற்படக் கூடுமென்றோ தன்னையே வெறுத்து அவன் நடந்துகொள்ளக் கூடுமென்றோ புவனாவால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடிந்ததில்லை.ஆனால் நடந்துவரும் நிகழ்வுகள் அவனுள் உறங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு மனிதனைப் படம்பிடித்துக் காட்டியபோது அவள் திகைத்துப்போனாள். அவன் இதேபோக்கிலேயே போய்க்கொண்டிருப்பானானால் அவள் தனக்கென்றுள்ள ஒரு வாழ்க்கையை வெகுவிரைவாகவே இழந்தாக வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்குப் பிறகு தொடரப் போகும் அவள் வாழ்வு?

பயம் அவள் நெஞ்சில் வேரோடிப் படர்ந்தது.
0







...............................................
ஒருமுதலாகிய முதுபொருளாய்
இருந்ததனங்களும் வம்பில் இழந்து
மதனசுகந்த விதனம்இது என்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-

வளமையும் மாறி இளமையுமாறி
வன்பல் விழுந்துஇரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகு ரோதம்அடைந்து-
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே-

வருவது போது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்திநடந்து
மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாய் அறியாமல் விடாமல்மொழிந்து.....

(பட்டினத்தார் பாடல்)





வீடு: 2


"இதோ ஊரையே அழித்துவிடுகிறேன் பார்!" என்கிறதுபோல, இருட்டிக் கொண்டு வந்து இடியும் மின்னலுமாய் பெரிதாய் அட்டகாசம் பண்ணி, புயற்காற்றோடு அங்குமிங்குமாய்த் திசைமாறி அடித்துப் பெய்த மழை, ஈரத்தை உள்வாங்கிக்கொண்டு ஏதுமறியாமல்கிடக்கிற நிலத்திடம் தன் ஆவேசத்தைக் காட்டமுடியாமல் எங்கோ ஓடி மறைந்திருந்தது.


மழைக்கு அஞ்சி ஒதுங்கியவர்களும் ஓடியவர்களும் வானத்தை அண்ணாந்து பார்த்து, "சே!" என்று சலித்து..."இந்தநாட்டிலை வெதரையும்(காலநிலை) நம்பேலாது... பொம்பிளையளையும் நம்பேலாதுஎண்டு சொல்கிறது சரியாத்தானிருக்கு!" என்று ஒட்டுமொத்தமாய்த் தத்துவம் பேசிக் கொள்கிறவர்களுக்குச் சாட்சியாய்-

மழையை இப்போது காணோம்!
வானம் வெளித்துச் சிரித்தது..
வெயில், நிலத்தில்வடிந்த ஈரத்தைத் துடைத்துச் சுத்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தது.

இந்த மழையைப்போலத்தான்-
அப்பாவின் கோபமும்.
எப்போது அவர் கொதித்துக் கொந்தளிப்பார் என்று சொல்லமுடியாது... ஆனால் வந்தவேகத்திலேயே அவரது சீற்றமும் சினமும் அம்மாவின்மீது முட்டி மோதி...ஈரத்தை உள்வாங்கும் நிலமாய் மௌனித்திருக்கும் அம்மாவின் சாந்தமான முகத்தின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே தணிந்து அல்லது மறைந்துபோகும்.
அம்மாவின் அருகில் வந்தமர்ந்து அவவின் தலையை மெல்லவருடி மௌ்ளப் புன்னகைத்து-"கோவிக்காதை...பிழை என்னிலையும் இருக்கலாம்!" என்று தான் இழைக்காத தவறானால்கூட அதுவும் தன்னுடையதே என்று ஒப்புக்கொண்டு அம்மாவின் முகத்தை மூடிக்கொண்டிருக்கிற துயர ரேகைகளை விரட்டி மறுபடியும் அவளது முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவருவதில் அப்பா ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார்.


அப்பாவின்மீது கோபம் வரும் அருந்ததிக்கு. "ஒரு ஆம்பிளை இப்பிடிப் பயந்தாங்கொள்ளித்தனமாய் நடந்து கொள்ளலாமா?" என்று.
அதேநேரம் ஆச்சரியம்-"அப்பாவால் எப்படி இப்படித் தன் உணர்ச்சிகளை உடனுக்குடன் கட்டுப்படுத்தி சகஜநிலைக்கு மாறமுடிகிறது?"என்று.

இத்தனைக்கும் அப்பா ஒரு சாதாரணமனிதராக வாழப்பழகாதவர்.தானும் தன்பாடும் என்று இருப்பது அவருக்குப் பிடிக்காது.
"ஒவ்வொருத்தரும் தானும் தன்ரகுடும்பமும் எண்டுதானை வாழுகினம்... ஆனா உங்களாலை அது ஏலாது...ஊர்ச்சோலியளை எல்லாம் அள்ளித் தலையிலை போட்டுக் கொண்டு திரியிறீங்கள்...இதாலை ஒரு அஞ்சு சதத்துக்குப் பிரயோசனம் உண்டா?"
-எப்போதாவது அபூர்வமாக அம்மா வாயைத்திறந்தால் இப்படித்தான் அப்பாவைக் கிண்டிக் கிளறுகிறமாதிரிக் கேள்விகள் வரும்.

ஆனால் அப்பாவுக்கு அந்த நேரம் கோபம் வராது.
"நானும் என்ரைகுடும்பமும் எண்டு உருவாகிறதே பொது நலத்தாலைதானை? ..நீ ஆரோ ஒருத்தி... நான் ஆரோ ஒருத்தன் எண்டு இருந்திருந்தால் அன்புகாட்டி வாழத்தெரியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பொதுநலத்துக்காக வாழ்கிற மனப்பான்மைதான் இந்த உலகத்தை வாழவைக்குது. அதை மறந்திராதை.!"

அப்பாவுக்கு அம்மாவால் பதில் சொல்லமுடியாது.
அவள் அவரைக் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.முன்பின் அறிமுகமில்லாமல் திடீரென ஏற்பட்ட சந்திப்பு. முற்றவெளியில் நடந்த கலைவிழாவொன்றில் அவர்கள் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டார்கள். இருவரும் ஒருவரையொருவர் ஏற்கனவே சந்தித்தவர்களாய் உணர்ந்துகொண்டார்கள். பூர்வஜன்மபந்தம் என்று அதற்கு அர்த்தம் கொண்டார்கள். அவர்களைச் சந்திக்கவைத்து காதலில் சிக்கவைத்த காலம் அந்தக் காதல் அரைகுறையாக வாடிப்போகாமல் அவர்கள் கணவன் மனைவியாக இணையவும் வழிவகுத்தது.

மகள் அருந்ததிக்கே இப்போது வயது இருபத்திநான்கு.
குடும்பவாழ்வில் வெள்ளிவிழாவும் கண்டாயிற்று.
"காதல் என்பது சுயநலம் அல்ல...அது பொதுநலம்" என்பார் அப்பா.

"தான் நல்லாயிருக்க வேணும் எண்ட சுயநலத்திலைதான் காதலே பிறக்குது!" என்பாள் அம்மா.கருத்துக்கள் அங்கே முரண்பாடு காணும்.ஆனால் அதற்காய் அவர்கள் காதலை இழந்துவிடவில்லை.தாம்பத்தியத்தில் இருபத்தைந்து வருடங்களானாலும் இன்னும் இளமை மாறாத காதல்.

"ஒருத்தருக்காக ஒருத்தர் வாழவேணுமெண்டு நினைச்சால் அதுதான் உண்மைக் காதல்... தனக்காக தான்வாழவேணுமெண்டு நினைச்சால் அது காதலே அல்ல..!" அப்பா கடுமையாக வாதாடுவார்.
"என்ர சுகம்தான் உன்ரைசுகம் எண்டு வாழவந்தவள் நீ...உன்ரை சந்தோசம் தான் என்ரை சந்தோசம் எண்டு ஏற்றுக் கொண்டவன் நான்... இண்டைக்கு நீ உன்ரை சுகத்திலையே குறியாய் இருந்தால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..தனிவாழ்க்கையிலை உனக்காக நான் எதையும் விட்டுக்குடுக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கையிலை என்ரை கொள்கைகளை குணாதிசயங்களை உனக்காக நான் மாத்திக்கொள்ள முடியாது!"

-இன்றைக்குக் காலையில் எப்படியோ ஆரம்பித்த வாக்குவாதம் அப்பாவின் ஆவேசத்தைக் கூட்டியிருந்தது.
"உனக்காக நான் உயிரையும்தருவன் எண்டு சொல்லிப்போட்டு இண்டைக்கு ஊருக்காக என்னையே எடுத்தெறிஞ்சு கதைக்கிறீங்கள்!"

-அம்மா வாய்க்குள் முனகியது அப்பாவின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. வயதுகளைத் தொலைத்து, இளமையைத்தொலைத்து, அனுபவங்களை நிறைத்துக்கொண்டு ஆனாலும் சமூகத்தில் தனக்கென்றொரு பாதையை வகுத்துக்கொண்டிருக்கிற தன்னை அவள் இளக்காரப்படுத்துகிறாள் என்பதுபோல் தோன்றிற்று அவருக்கு.

"உனக்காக நான் உயிரையும் தருவன் எண்டு சொன்னது உண்மைதான். இப்பவும் அப்பிடித்தான் வாழந்துகொண்டிருக்கிறன். ஆனால் அதுக்காக என்ரை உயிரை நீயே பறிச்சுப்போடாதை.!" என்று அவர் சினந்தபோது அம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் புரண்டது.
"என்ன அப்பா இது... அம்மா என்ன சொல்லிப்போட்டா எண்டு இப்பிடி அழவைக்கிறீங்கள்?" என்று தாய்க்காகப் பரிந்தபடி ஓடிவந்தாள் அருந்ததி.

"என்னவாவது சொல்லி ஒப்பாரிவைக்கிறதே கொம்மாவுக்கு இப்ப பழக்கமாப் போச்சுது!" என்று சொல்லிக்கொண்டே கதவைத்திறந்து வெளியே போனார் அப்பா.
"என்னம்மா?"
"எனக்குப் பயமாக் கிடக்கடி...!" அம்மாவின் குரல் தளதளத்தது.
"பயமா ஏன்?"
"இப்ப கொஞ்சநாளாவே உன்ரை அப்பாவின்ரை போக்குச் சரியில்லை.....!"
"ஏன்...என்னசெய்கிறார்?"
"அதை உனக்குச் சொல்ல ஏலாது...அதிலை ஒரு பிரயோசனமும் இல்லை!"
"சும்மா வீண்கவலைப்படுறியள்... அப்பாவைப்பற்றி எனக்கு நல்லாத்தெரியும்... நீங்கள் நினைக்கிறமாதிரி அவர் இல்லை...!"
"ஆனால் இந்தநாட்டுநிலமை அப்பிடி இல்லையேடி...எவ்வளவு திறமான ஆக்களையும் படுகுழியிலை கொண்டுபோய்த் தள்ளிப்போடும்...!"
"சும்மா விசர்க்கதை கதைக்காதீங்கோ அம்மா... எந்தநாடாயிருந்தால் என்ன நல்லவை எப்பவும் நல்லவைதான்... கூடாதவங்கள் எப்பவும் கூடாதவங்கள்தான்...!"
"நீ சொல்கிறை....ஆனா...!"
-அம்மா அதற்குமேல் எதுவும் பேசவில்லை.


மறுநாள் காலை.
திடீரென அலறிய தொலைபேசிச் சத்தத்தில் விழிப்புவந்தது அருந்ததிக்கு.
"ஹலோ...அருந்ததியா?"
எதிர்க்குரல் சட்டெனப் புரிந்துவிட்டது..
"அருந்ததிதான் கதைக்கிறன்...என்ன புவனராணி?"
"சண்முக அண்ணர் இருக்கிறாரா?"
"அப்பாவா? இல்லையே...வேலைக்குப் போயிருக்கிறார்...என்ன விசயம்?"
"அவசரமாய் அவரோடை கதைக்கவேணுமே!"
புவனராணி பதட்டப்படுவது தெரிந்தது.
"அப்பாவின்ரை வேலை இடத்து நம்பரைத் தாறன் கதைச்சுப்பார்."
"சொல்லு!"
புவனராணி தொலைபேசியை வைத்ததும் அம்மா அவசரமாக வந்தாள்.
"ஆரடி போன் எடுத்தது?"
"புவனராணி!"
"என்னவாம்?"
"அப்பாவோடை ஏதோ அவசரமாய்க் கதைக்கவேணுமாம்."
"அவரோடை என்ன கதைக்கவேணுமாம் இவள்?" என்று சற்றுச் சினத்துடன் கேட்ட அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அருந்ததி.
"அவரோடை கதைக்கிறதை என்னட்டையும் சொல்லலாம்தானை?" அருந்ததிக்குச் சிரிப்புவந்தது.
"அம்மா..!புவனராணிக்கு என்ன பிரச்சினையோ...அப்பாவிட்டை ஏதாவதுஉதவி கேட்க எடுத்திருப்பா... அப்பாவோடை கதைக்கிறதை எங்களிட்டைச்சொல்லு எண்டு கேட்கிறது நல்லதே... அவ சொன்னாலும் எங்களாலை தீர்க்க முடியாத பிரச்சினையாக்கூட இருக்கலாம்தானை!"
"உனக்கு உலகம் விளங்காது விடு!" என்று சலித்துக்கொண்டே மறுபடி தன்னுடைய அறைக்குப் போனாள் அம்மா.

0






..........................
துயில்வரும்நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும்உ லர்ந்து வரண்டு
துகிலும் இழந்து சுணையும்அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து

தெளிவும்இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சமு லைந்து மருண்டு
திடமும்அலைந்து மிகவும்அலைந்து
தேறிநல்லாதரவு ஏதுஎன நொந்து

மறையவன்வேதன் எழுதியவாறு
வந்ததுகண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனியென தொந்தம்
மேதினிவாழ்வுநி லாதினிநின்ற

கடன்முறைபேசும் எனவுரை நா
றங்கிவிழுந்து கை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலுசு வாசமும் நின்று
........................................................




வீடு-3

"பாவம்....புவனராணி. இந்தச் சின்ன வயசிலை அவளுக்கு இப்பிடியொரு விதி!"
"ஆராருக்கு என்ன நடக்கவேணுமோ அதுதானை நடக்கும்!"
"எண்டாலும்..பாவம்....அவள் எப்பிடித்தான் தாங்கிக்கொள்ளப் போறாளோ...!"
"சொந்தபந்தமெண்டும் ஆரும் இல்லை...சரி... ஒரு பிள்ளையாவது பிறந்திருந்தால் அதை நினைச்சாவது ஆறுதல் அடைஞ்சிருப்பாள்...!"
"ம்...நாங்கள் பாவம் பாத்தென்ன...செத்தவன் செத்ததுதான்...!"

-புவனராணியின் அயலில் இருந்தவர்களுக்கு இப்போது அவளில் அனுதாபம் பிறந்திருந்தது...

பரஞ்சோதியின் கதை இப்படிப் பாதியில் முடியுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான்.
மரணம் யாருக்கும் திகதி குறித்துவிட்டு வருவதில்லை.எந்தநிலையில் இருந்தாலும் எப்படி இருந்தாலும் காலம் தன் கணக்கைமாற்றி எழுதுவதில்லை.
பரஞ்சோதியின் விடயத்திலும் அதுதான் நடந்தது. நேற்றுமாலை நெஞ்சுவலி என்று வந்து படுத்தவன் இரவு அம்புலன்ஸ்வந்து ஏற்றியபோது உயிர் பிரிந்திருந்தது.

எல்லாரையும் விட அதிகமாய்த் துடித்துப் போனவர் சண்முகம்தான். பரஞ்சோதிக்கும் அவருக்கும் இடையில் பதினைந்துவருடப் பாசம்.

அவர் ஜெர்மனிக்கு வந்தபுதிதில் அகதிக்காம்பில் பதினெட்டு வயதுப் பையனாக அவனைக் கண்டார் அவர். அது என்னவோ இவர்மீது அவனுக்கு அப்படியொரு பிடித்தம். "அண்ணை அண்ணை!" என்று இவரையே சுற்றிச்சுற்றி வருவான். சில காலங்களுக்கு இவர் வீட்டிலேயே அவனும் தங்கியிருந்தான். விசாப் பிரச்சினைகள் தீர்ந்து வேலையும் கிடைத்தபிறகு தனியாக வீடு எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஆனாலும் சண்முகத்தின்மீது அவனுக்குள்ள அன்பு குறைந்ததாகக்கொள்ளமுடியாது.


அவனுக்கும் புவனராணிக்கும் திருமணம் நடந்தபோது அவனது தந்தையின் இடத்திலிருந்து திருமணப்பதிவுக்கு சாட்சிக் கையெழுத்துப்போட்டவரும்m சண்முகம்தான். தான் முன்னின்று நடத்திய திருமணம் இப்படிஅரைகுறையாக முற்றுப்பெற்றுவிட்டதில் சண்முகத்துக்கு தாளாத வேதனை.

பரஞ்சோதியின் மறைவிலும் மேலாக புவனராணியின் நிலையே அவரை இன்னும் பாதித்தது. அவளுக்கென்று இங்கு உற்றார் உறவினர் யாருமில்லை.பழகியவர்களிலும் உண்மையான பாசத்தோடு அவளிடம் பழகியவர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள்.மற்றவர்களுடன் அதிகம் பழக்கம் வைத்துக்கொள்ள விரும்பாத பரஞ்சோதியின்போக்கும் அதற்கொரு காரணமாக இருந்தது.

இனி....?
என்னதான் வெளிநாட்டு வாழ்க்கையில் மற்றவர்களைப்பற்றி அக்கறைப்படாமல் தாங்களும் தங்கள்பாடும் என்று வெள்ளைக்காரன்மாதிரி வாழ்ந்துவிடலாம் என்று வாழமுனைந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இனசனம் என்று தேடி ஓட வைத்துவிடுகிறது காலம்.அதிலும் தனிமைவாழ்வில் வெள்ளைக்காரன்மாதிரி வாழ்வது அத்தனை சாத்தியமான காரியமல்ல என்பது அப்படி வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்குத்தான் புரியும்.

தாங்களும் தங்கள்பாடும் என்று ஆரம்பித்து தங்கள் குடும்பப் பிரச்சினைகளிலிருந்து மீளமுடியாமல் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் மனம் புழுங்கி மனநோய்வைத்தியசாலையைத் தஞ்சம் புகுந்தவர்கள் பலரை சண்முகம் அறிந்திருந்தார்.
அப்படி ஒரு நிலை புவனராணிக்கு ஏற்பட்டுவிட்டால்....
அச்சம் அவருள் குடிகொண்டது.
வீட்டிலும் வேலைத்தலத்திலும் புவனராணியின் நினைவும் நிலையும்அவரது மனத்தை முற்று முழுதாய் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
அவளுக்கு ஏதாவது வழிசெய்தாகவேண்டும்.

முன்பொருநாள் பரஞ்சோதி அவரிடம் கேட்டது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.

"அண்ணை...சாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?"
"என்னடாப்பா...திடீரெண்டு! வாழும்வளரும் பிள்ளையள் சாவைப்பற்றி இப்ப நினைக்கப்படாது!"
"ஆனால் பிறந்தவை எல்லாரும் சாவைத் தங்களோடை கொண்டுதானை திரியினம்!"
"மெய்தான். அதுக்காக அதைப்பற்றியே நினைச்சுக்கொண்டிருக்கவேணும் எண்டில்லையே"
"அதுக்கில்லை அண்ணை நான் கேட்டது....சாவுக்குப் பின்னாலை என்ன இருக்கும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?"
"வாழ்க்கைதான்!"
"என்னண்ணை...செத்தவன் எப்பிடி வாழ்கிறது?"
"இப்ப நாங்கள் ஆர்? முந்தி வாழ்ந்தவங்களின்ரை ஒரு பகுதி. என்ன? இனிவாற சந்ததி எங்களின்ரை பகுதி...இப்ப உதாரணத்துக்கு நீ உன்ரை தாய்தகப்பன்ரை எச்சம்.உன்ரை பிள்ளையள் உன்ரை வாழ்க்கையின்ரை எச்சம்...இப்ப உன்னிலை உன்ரை தாய்தகப்பன்ரை ரெத்தம் ஓடுறதுமாதிரி...உன்ரை பிள்ளையளிலை உன்ரை ரெத்தம் ஓடும். என்ன...அப்ப நீ செத்தாலும் உன்ரை பிள்ளையளின்ரை உருவத்திலை நீவாழ்கிறதாத்தானே அர்த்தம்...!"
"சும்மா போட்டுக் குழப்பிறியள்" என்று சிரித்தான் பரஞ்சோதி. ஆனாலும் அவனது கண்களில் ஒருகலக்கம் தெரிந்ததை அவதானித்தார் அவர்.
"என்னடாப்பா....நீ எதையோ நினைச்சுக் குழம்பிறை...என்ன சங்கதி...? என்னட்டைச் சொல்லுறதாயிருந்தால் சொல்லு!"
"உங்களுக்குச் சொல்லாமல் வேறை ஆரட்டை அண்ணை சொல்லுவன்...என்ரை வாழ்க்கை என்னோடை முடிஞ்சிடும்போலக் கிடக்குது!...என்னதான் உழைச்சென்ன... பேர் சொல்ல ஒரு பிள்ளை பிறக்காமல்..."

சண்முகம் சிரித்தார்.
"இதுக்கேனடாப்பா இவ்வளவு கவலைப்படுகிறை...இப்ப ஏன் அவசரப்படுகிறை....கொஞ்சம் பொறுத்துப் பிறக்கட்டுமன்"
"கலியாணம்கட்டி அஞ்சுவருசம் ஆச்சுது அண்ணை... அதைவிட இன்னொரு விசயம்....இனி எனக்குப் பிள்ளை பிறக்க சந்தர்ப்பமே இல்லையெண்டு டொக்டர் சொல்லிப்போட்டார்!"
அதைச்சொன்னபோது அவனது கண்கள் கலங்கியிருந்தன.
தலையைக் குனிந்துகொண்டான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல வழிதெரியாமல் வானத்தைப் பார்த்தார் சண்முகம்.

"நான் எனக்காகக் கவலைப்படேல்லை அண்ணை...பாவம் இவள் புவனா!"
"சரி... இதையே நினைச்சுக் கவலைப்படாதை...வாழ்க்கையிலை எவ்வளவோ காரியங்கள் இருக்கு....!சில துன்பங்கள் வாறபோது அதுக்கு மாற்றுவழியாகவும் சில காரியங்களை நாங்கள் செய்யலாம்...நான் என்ரை மனிசி என்ரை பிள்ளையள் எண்டு ஒரு குறுகின வட்டத்துக்குள்ளை நிக்காமல் என்ரை இனம் என்ரை சனம் எண்டு கொஞ்சம் பார்வையை விரிச்சுப்பார். உனக்கு ஒரு பிள்ளை பிறக்கேல்லையே எண்டு கவலைப்படுகிறபோது எங்கடை நாட்டிலை எத்தினையோ பிள்ளையள் தாய்தகப்பனை இழந்து நிக்குதுகளே... அதைக் கொஞ்சம் நினைச்சுப்பார்...அந்தப் பிள்ளையளுக்கு ஏதாவது செய்ய முடிஞ்சால் அது எத்தனை பெரிய புண்ணியம்!"

சண்முகம் அதைச் சொல்லி முடித்துவிட்டு அவனைப் பார்த்தபோது அவன் தன்கண்களைத் துடைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தாற்போல் தோன்றிற்று.


அடுத்தடுத்த மாதங்களில் அவன் தன் போக்கை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருந்தான் என்பதைப் புவனராணியின் கதைகளிலிருந்து ஊகித்துக் கொண்டார் சண்முகம்.
ஆனால் காலம் அவனை இப்படி அற்பாயுளில் கவர்ந்துகொண்டு போகுமென்று யார் எதிர்பார்த்தார்கள்?
0



...........................
வளர்பிறைபோல எயிறும் உரோம
மும்சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலைபோல்யம தூதர்கள் வந்து

வலைகொடுவீசி யுயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில்விழுந்து மனைவி புலம்ப
மாள்கினரேயிவர் காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர்
இடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர் தாம்
இருந்தசலம் கழுவுஞ்சிலர் என்று
பணிதுகில் தொங்கல் களபம் அணிந்து
பாவமே செய்து நாறும் உடம்பை

வரிசைகெடாமல் எடும் எனவோடி
வந்துஇள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகிநடந்து சுடலைடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகிடைமூடி அழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகியெலும்பு கருகிடயங்கி
ஓர்பிடிநீறும்இ லாத உடம்பை
நம்பும் அடியேனை இனியாளுமெ!

(பட்டினத்தார் பாடல்)





வீடு: 4

அருந்ததிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இப்படியொரு நிலை ஏற்படும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் அது ஒரு சின்னச் சண்டையாக உருப்பெறுவதும் யாராவது ஒருவர் அதில் விட்டுக்கொடுத்து மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்புவதும்...எல்லாம் சாதாரணம்தான்.


ஆனால் இப்போது...
ஒரு சிறு விவாதம் பெரும்புயலாக மாறி அப்பா என்ற ஆலமரத்தையே அடியோடு சாய்க்கிறமாதிரி...
அப்பா கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.

இரண்டு நாட்களாக அவர் வீட்டுப் பக்கமே வரவில்லை.வேலைத் தலத்திலும் இல்லை.வேறு எங்கே போயிருப்பார் என்பது புதிர்.
"எங்கைபோவார்...அந்தப் புவனராணி வீட்டைதான்!" என்ற அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அருந்ததி.
"சீ...இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ அம்மா...இது பாவம்!"
"எதடி பாவம்..? வயசுபோகப்போக மனிசருக்குப் புத்தி மாறும் எண்டது இப்பதான் எனக்கு விளங்குது...கொப்பனுக்குப் புத்தி மளுங்கிட்டுது!...."

அம்மாவின் நிலையைப் பார்க்க அம்மாவுக்குத்தான் இப்போது புத்தி மழுங்கிவிட்டது என்று தோன்றிற்று அருந்ததிக்கு.

"நீங்கள் ரெண்டுபேரும் இப்பிடி மாறிமாறிச் சண்டைபிடிச்சுக்கொண்டிருந்தால் பழுதாப்போறது உங்கடைவாழ்க்கை இல்லை அம்மா...என்ரை வாழ்க்கைதான். ஒரே ஒரு பிள்ளை எண்டு இருக்கிற என்னைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கிறீங்களா நீங்க? நீங்கள் என்ன சொன்னாலும் சகிச்சுக்கொண்டிருக்கிற அப்பா இப்ப ரெண்டு நாளா வீட்டையே வராமல் இருக்கிறேர் எண்டால்.... அவரின்ரை மனம் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கும் எண்டதைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிச்சீங்களா நீங்க?"
"முந்தி எண்டால் கொப்பனுக்குப் போக்கிடம் இல்லை...இப்ப இருக்குது... அதுதான் போயிற்றேர்!"

அம்மாவின் பேச்சு அருந்ததிக்கு சினத்தை மூட்டிற்று.இனி அம்மாவை எதிர்த்துக் கதைப்பதில் அர்த்தமில்லை என்றுணர்ந்தாள் அவள்.
எதுவும் பேசாமல் தனது அறைக்குள் போய் கதவைச சாத்திக்கொண்டாள்.


அடுத்த சில நிமிடங்களில் அப்பாவின் குரல் கேட்டது.
"அருந்ததி"
அவள் அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
அப்பாவும் அவருக்குப்பின்னால் புவனராணியும்!

அம்மா கண்ணில் படவில்லை. மற்றொரு அறைக்குள் போய் அம்மா மறைந்துகொண்டிருக்கிறாள் என்று அருந்ததிக்குப் புரிந்தது. அப்பாவுக்கும் புரிந்திருக்கும்.

"அம்மா எங்கை...?" என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி விசாரித்தாள் புவனராணி.
"என்ன விசயம்?" கேட்ட அருந்ததியின் குரலில் கொஞ்சம் கடுமை தொனித்தது.
புவனராணி அதைப் புரிந்துகொண்டாளோ என்னவோ...களையிழந்திருந்த அவளது முகத்தில ஒரு விரக்திப் புன்னகை படர்ந்தது.

"இண்டைக்கு நான் வெளிக்கிடுறன்...அதைச்சொல்லிப்போட்டுப் போவமெண்டு!"
"எங்கை?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அருந்ததி.
"ஊருக்கு!" என்றாள் புவனராணி.
"அங்கையா...?அங்கைபோய்...?"
"இங்கையிருந்தும் என்ன செய்யப்போறன்? இந்த அந்நிய தேசத்திலை சொந்த நாட்டாரே வெளிநாட்டுக்காரர்மாதிரி... இதைவிட அங்கைபோய் அயலட்டத்தோடை சேர்ந்து கஞ்சி குடிச்சாலும் நிம்மதியிருக்கும்..."

புவனராணி அதைத் தளதளத்த குரலில் சொன்னாலும் அதில் ஒரு உறுதியிருந்தது.
"இப்ப கொஞ்சநாளாய் அப்பாவுக்குத்தான் சரியாக் கரைச்சலைக் குடுத்திட்டன்...என்ரை பயண ஒழுங்குகளுக்கெல்லாம் அப்பாவைத்தான் கூட்டிக் கொண்டு திரிஞ்சனான்..."

அருந்ததிக்குப் புரிந்தது.
"ஏழுமணிக்கு பிளைற்...அப்பாவோடை நீயும் அம்மாவும் வந்து என்னை பிளைற் ஏத்திப்போட்டு வாங்கோவன்..."
"இரு புவனா....வாறன்....!"
அருந்ததியும் புறப்பட ஆயத்தமானாள்.

அறைக்குள்ளிருந்து அழுதுகொண்டிருந்த மனைவியைச் சமாதானப்படுத்த உள்ளே போனார் சண்முகம்.
"இதோ ஊரையே அழித்துவிடுகிறேன் பார்!" என்கிறதுபோல, இருட்டிக் கொண்டு வந்து இடியும் மின்னலுமாய் பெரிதாய் அட்டகாசம் பண்ணி, புயற்காற்றோடு அங்குமிங்குமாய்த் திசைமாறி அடித்துப் பெய்த மழை, ஈரத்தை உள்வாங்கிக்கொண்டு ஏதுமறியாமல் கிடக்கிற நிலத்திடம் தன் ஆவேசத்தைக் காட்டமுடியாமல் எங்கோ ஓடி மறைந்திருந்தது.
000



(பிரசுரம்: பூவரசு 1997)

Samstag, Februar 14, 2009

பழைய மனிதன் புதிய உலகம்

-இந்துமகேஷ்


1.


மின்னலடித்தாற்போல்....
என்னுள் புதிதாய் சட்டெனப்பரவி..நிரந்தரமாய்த் தங்கிவிட்ட ஒளிக்குள்ளே நான் இப்போது என்னைப் பார்க்கிறேன்.
நான்...?
இரத்த வெள்ளத்துக்குள் மூழ்கி அதன் அலைகளில் சிக்காமல் தனியனாய் கைகால்களைக் குறுக்கிக்கொண்டு மூடிய விழிகளுக்குள் என்னுள் என்னைத் தரிசித்துக்கொண்டு...
நான்...?
இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது!
இன்னும் எத்தனைகாலம் இந்தச சின்னச் சிறைக்குள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னில் நான் காணும் இந்த உலகுக்கு வெளியே இன்னொரு பரந்த உலகம் இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் வலுக்கிறது.


-இருக்கும் இருக்கும் இருந்தாகவேண்டும்! இல்லாமல் நான்மட்டும் தனியனாய்...?


மூடிய விழிகளுக்குள் முற்றுமுழுதுமாய்ப் பரவிக்கிடக்கிற ஒளியில் நான் என்னை முற்றுமுழுதுமாய்த் தேடும் ஆவலோடு உணர்வுகளைப் பரப்பி உற்சாகப்படுகையில் என் உடலிலும் சிறு அசைவு...
எங்கிருந்தோ "அம்மா..!"என்று பேரொலி எழுந்து என்னை அதிரவைக்கிறது.
மறுபடி அசைகிறேன்.

இப்போதும் "அம்மா..!"
மலைமுகட்டில் குரலெழுப்பி அது மறுபடி எதிரொலித்து வருமாப்போல்...
"அம்மா...!"
"என்னடி?"
-இன்னொரு குரல் மெல்லிதாய் வருகிறது!

சட்டென என்னைச்சுற்றி அழுத்தமாய் இரத்த அலைகள் புரண்டுவந்து என் அசைவைக் கணிப்பிட்டுச் செல்வதை உணர்கிறேன்.
"பயப்பிடாதை...வயித்துப்பிள்ளை துடிக்குது...அவ்வளவுதான்!"
"இவ்வளவு நாளும் இல்லாமல் இண்டைக்கு...?"
-மறுபடி எதிரொலி.
"அது இப்பிடித்தான்...நாலஞ்சுமாசத்திலை...! இது உனக்கு முதல்பிள்ளை எல்லே?"
-என்னுள் நான் சிலிர்த்துப்போகிறேன்.
முதல்பிள்ளை?...நான்...? யாருக்கு?"
-விழிகளைத் திறந்து சூழலை ஆராயத்துடிக்கிறேன்.ஆனால் இயலவில்லை. சிலபொழுது முன்புவரை நான் இருந்த நிலைமாறி இப்போது புதிதாய் ஒரு கருவறைக்குள் குடிபுகுந்திருக்கிறேன் என்ற உண்மை எனக்கு உறைக்க எனக்குள் ஒரு போராட்டம் பிறக்கிறது.

இப்போது நான் எங்கிருக்கிறேன்...?
யார்வயிற்றில்...? யார்கருவில்...?
-என் கேள்விக்கு விடைகாணும் அந்த முயற்சியில் நான் தோற்றுப் போகிறேன். யாரோ என்னை வருடிக் கொடுப்பதைப்போல- இதமான இரத்த அலைகளின் தாலாட்டில் நான் என்னை மறக்க- சற்று முன்புவரை நான் இந்தக் கருவறைக்குள் குடிவருமுன் அனுபவித்த உணர்வுகள் என் நினைவுகளாய் என்னுள் விரிகின்றன.



2.
சொல்லத் தெரியவில்லை!
...ஆனால் உணரமுடிகிறது.
இது ஒரு புதிதான அனுபவம்.......
ஒவ்வொரு உயிரும் என்றோ ஒருநாள்...தானே தனியாய் உணர்ந்து...தன்னுள்தானே அடங்கிப்போகிற அனுபவம்.
இன்னும் கொஞ்சநேரம்தான்.
இந்தக் கொஞ்சநேரம் என்கிற கணக்கு சிலவினாடிகள்....சிலநிமிடங்கள்... அல்லது சிலமணி நேரங்களாகக்கூட இருக்கலாம்.
சூழ இருப்பவர்களைப் பொறுத்தவரை என்கதை முடிந்துவிடும்.

அவ்வளவுதானா?...அவ்வளவுதானா...?
இப்போது பயம் போய்விட்டது.
மூச்சைப்பிடித்துக்கொண்டு எந்தப்பக்கம் ஓடினாலும் கயிறுவீசக்காத்திருக்கும் காலம்...!
பிடிபட்டாகிவிட்டது...இனி என்ன பயம்?
"கண்முழிச்சுப் பாக்கிறான்....நாக்குப்புரளுது....ஏதோ சொல்லப்போறான் போலை... காதைக் கிட்டக் கொண்டுபோய்க் கேளுங்கோ...என்னவோ சொல்ல நினைக்கிறான்...!"
-இந்தக் குரல் எனக்குப் பழக்கப்பட்டதுதான்...
ஆனால் யாரென்று தெரியவில்லை..
பெண்குரல்...!
அம்மா?
-இல்லை!..அவள்போய் ரொம்பக்காலம்!
அக்கா?
-இல்லை!...அவள் எட்டாத தூரத்தில்!
மச்சாள்மார்?
-இல்லை!
....மாமி.. சித்தி...என்று?
-இல்லை!...யாருமில்லை...!
இரத்த சொந்தங்கள் எதுவும் பக்கத்தில் இல்லை!


உறவுகள் என்று இல்லாமல் வெறும் ஒப்புக்குமட்டும் உறவாடிப் போகிற அண்ணன்- தங்கை, அக்கா-தம்பி பாசம்போல் இங்கே எங்கோ எனக்குப் பழக்கப்பட்டுப்போன பெண்குரல்!

"கண் முழிச்சுப் பாக்கிறான்!"
-விழித்தா கிடக்கிறேன்? குரல்மட்டும் கேட்கிறது... பார்வைக்கு எதுவும் எட்டவில்லை...செவிப்புலனுக்குமட்டும் சிறுசிறு சத்தங்கள் எட்டுகிறது!உயிரடங்கிப் போகும்போதும் ஒரு சில உயிர்கள்..என்னைச்சுற்றி!
"ஒண்டுமாய் விளங்கேல்லை..சும்மாதான் நாக்கைப் புரட்டுறான்...தாகமோ... கொஞ்சம் பால்கொண்டு வா...! பருக்கிப் பாப்பம்!"
-ஆண்குரல் கேட்கிறது...
இதுவும் பழக்கப்பட்ட குரல்தான்...யாரென்றுதான் விளங்கவில்லை.
யாராயிருந்தால் என்ன?...எனக்கென்ன?
...இவர்களைவிட்டு நான் போய்க் கொண்டிருக்கிறேன்... இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

"பருக்காதேங்கோ!...எல்லாம் வெளியிலைதான் வழியுது... விழுங்கிறான் இல்லை!"
-பெண்குரல்.
"இனிப் பிரயோசனமில்லை...மற்ற ஆயத்தங்களைக் கவனிக்க வேண்டியதுதான்.!"
-ஆண்குரல்.
முடிந்தாயிற்றா எல்லாம்?
நான் இன்னும் முடியவில்லையே!
வாயில் ஊற்றிய பால் தொண்டைக் குழிக்குள் இறங்காமல் வெளியே வழிந்தோடிவிட்டால் மரணித்துப்போய்விட்டேன் என்றா அர்த்தம்?

அம்மாவின் முலையைச் சப்பிச்சப்பி உறிஞ்சியபால் ஜீரணித்து இரத்தமாகி... இளைஞனாகி...மார்புநிமிர்ந்த பெண்மையில் மயங்கி...மார்புதைந்து....பாலும் பழமும் பவளவாயும் என்று...ருசித்து...ருசித்து...

அன்னைமுலை தந்த அப்பாலில் தொடங்கி-
இறுதிநேரத்தில் புகட்டப்படும் இப்பால்வரையில்...
எத்தனை பால்...?

ஆண்பால்..பெண்பாலாய் பாலியல்படித்து...!
திருப்தியாயிற்றா மனது?

3.
வெய்யில் கொழுத்துகிறது....
வியர்வையில் நனந்துபோன ஷேர்ட்டைக்கழற்றி வேலியில் காயவிட்டுத் திரும்புகையில் என் விரிந்த நெஞ்சைத் தன் மென்விரலால் மெள்ளக்கீறி என் முகம்பார்த்துச் சிரிக்கும் ஆதித்யா....
"என்ன உங்களுக்கு இப்பிடி வேர்க்குது?"
"வெய்யில் கொழுத்தினாலும் வேர்க்கும்...கடுமையாய் வேலைசெய்தாலும் வேர்க்கும்"
-அவள் விழிகளில் நாணம் நிரம்பிச் சிரிக்கிறது.

"நல்லாக் கதைப்பியள்!"
"எல்லாம் நீ சொல்லித் தந்ததுதான்!"
"ஏன் பொய் சொல்லுறியள்...நான் சொல்லித் தராமலே உங்களுக்கு நிறையத் தெரிஞ்சிருக்குது."
"அப்ப வேறை யாரோ எனக்குச் சொல்லித் தந்திருக்கவேணும்....அது... ஆரெண்டுதான் ஞாபகம் வருகுதில்லை!"

நாணம் அவள் விழிகளிலிருந்து அவசரமாய் விலக-பொய்யான கோபத்துடன் அவள் என்னிலிருந்து சற்று விலகிநின்று முறைத்து...
"..என்னைவிட உங்களுக்கு எத்தினைபேரைப் பழக்கம்?"

"நான் முற்றுமாய் அறிந்த ஒருத்தி நீதான்!" என்று சொல்லிவிட நினைத்து... சொல்லாமல் அவள் முகத்தைப் பார்க்கிறேன்.
"இனி நீங்கள் என்னோடை கதைக்கவேணாம்...என்னைப் பார்க்கவேணாம்...என்னை நினைக்கவேணாம்...என்னைச் சந்திக்கவேணாம்..."
"சரி...! நீ என்ன சொன்னாலும் அதன்படி நடக்கவேணும் எண்டுதானே நமக்குள்ளை ஒப்பந்தம்...இப்ப நீ சொல்கிறமாதிரியெல்லாம் நான்நடக்காட்டில் என்னிலை உனக்குச் சரியான கோவம் வந்திடும்"

-வேலியில் காயப்போட்ட ஷேர்ட்டை எடுப்பதற்காக நான் கையை உயர்த்த உயர்த்திய என் கையைப் பட்டெனப்பற்றி கோபம் தணிந்து சிரிக்கிறாள் ஆதித்யா.

"நீங்கள் சரியான ஆள்தான் என்ன!"
"அது உனக்குத்தானே தெரியும்!"
"சீ...!போங்கோ!"
-செல்லமாய் சிணுங்கிய அவள் கன்னத்தில் உதடுபதித்து...
"விடுங்கோ...விடுங்கோ..."என்று திணறி...ஆனால் என்னை இன்னும் இறுக அணைத்து...
-மனம் வேட்டை நாய்போல வெறிபிடித்து அலைந்த காலங்கள்...
ஆனால் அந்த வெறிக்குள்ளே தேங்கிக் கிடந்த காதல்...!
காதலா அது?
ஆம்...காதல்தான்!
"எல்லாம் ஒரு பருவத்துக்கு வாற வருத்தங்கள்தான்...ஆனால் இந்த வருத்தத்திலேயே ஊறிப்போயிட்டால் பிறகுவாழ்க்கையில் எதுவுமே மிச்சமிருக்காது..."
-சொன்னவர்கள் கண்ட மிச்சமென்ன என்று கணக்குப்பார்த்து அதிலும் மிச்சமில்லை என்று கண்டபிறகு...அனுபவிப்பதே மிச்சமென்ற உணர்வு அதிகமாக..!

அந்த இளமைக்கும் ஒரு வசந்தத்தைக் காட்டியவள் ஆதித்யா.
ஆனால் அந்த வசந்தம் சடுதியாகவே மறைந்துபோயிற்று...
இரண்டு அல்லது மூன்று வருட காதல் வாழ்க்கை கனவாய்க் கலைந்து....

கிராமத்து ஆஸ்பத்திரிக்கட்டிலில் ஆதித்யா துவண்டு கிடந்தாள்...
கிராமத்துக்கு அப்போதுதான் புதிதாய் அறிமுகமாகியிருந்த"கான்சர்" அவளை எனக்குக் கனவாக்கி மறைத்தது.


4.
கோபம்!
இந்தப் பொல்லாத இயற்கைமீது எனக்குப் பொல்லாத கோபம்.

எங்கே முற்றுப்புள்ளி இடவேண்டும் என்பது தெரியாமல் எழுதிப்பழகும் சிறுபிள்ளையைப்போல்... இயற்கை பலரது வாழ்க்கைக்கும் இடக்கூடாத இடத்தில் முற்றுப்புள்ளி இட்டுவிட்டு...!

எனக்குக் கோபம்.
இந்தக் கோபத்திலிருந்து நான் விடுபட்டாகவேண்டும்.
ஏதாவதொரு மயக்கம்...
பொருள் பதவி புகழ் என்று ஏதாவதொரு மயக்கத்திலேயே புரளப் பழகிவிட்ட மனித மனத்திலிருந்து நான் வித்தியாசப்பட்டேன்.

ஆதித்யாவில் அவளது மென்மையான உணர்வுகளில் கட்டுண்டிருந்த மனம் புதிதாய் ஒரு போதைக்குள் புக என்னைத்தூண்டிற்று.

ஊரின் ஒதுக்குப்புறமாய் இருந்த தவறணைக்கும் சுடுகாட்டுக்கும் இடைவெளி சொற்பம்தான். அடுத்தடுத்த காணிகளிலேயே இரண்டும்.

சுடுகாட்டில் தீய்ந்துபோன ஆதித்யாவின் அழகியமேனி மனத்தைத் தகிக்கையில் என் வாய் பிளந்து குடல் நிறையக் கள்ளை ஊற்றிக் கொண்டேன்.

சோகம் இப்போது சுகம் தருவதுபோல்...
ஆனால் எத்தனை காலத்துக்கு அதெல்லாம்?

"இவனெல்லாம் ஒரு மனிசனெண்டு... தூ!"
-முதுகுக்குப் பின்னால் ஆரம்பித்த விமர்சனம் இப்போது முகத்துக்கு எதிராகவே.

கோயில் வீதியில் ஒருநாள் குப்புறக் கிடந்தேன்.
பக்தி பரவசம் என்று அர்த்தமல்ல. நிறைந்த போதை.
முகத்தில் அலை அடித்தது
-நீரலை!

மெள்ள விழித்தேன்...
எதிரில்-சிவப்புக் கரைபோட்ட கரும்பச்சைச் சேலையில் தன் செக்கச் சிவந்த மேனியை இன்னும் அழகாக்கி கோயிற் சிற்பம்போல் என் கண்ணெதிரில் காட்சிதந்த அவள்...
வானதி!

இடுப்பிலிருந்த குடத்து நீரை என்முகத்தில் நிறையவே அடித்து என்னில் விழிப்பைக் கொணர்ந்து...
"எழும்புங்கோ...எவ்வளவு படிச்சு எவ்வளவு கண்ணியமானவராய் நடந்து... எவ்வளவு சனங்கள் மதிக்க சிறப்பாய் இருந்த நீங்கள்...இண்டைக்கு இப்பிடிக் கேவலமாய் நடக்க உங்களுக்கு வெக்கமாயில்லை?..எழும்புங்கோ...!"
-அவள் என்னை விழிக்கவைத்தாள்.

விழிப்பு என் விழிகளில் மட்டுமல்ல என்னிலும்-
என்னுள்ளும்.
என்னை விழிப்புற வைத்த வேகத்திலேயே-
அவள் போய் மறைந்தாள்.
எழுந்தவன் தள்ளாடி நடந்தேன்.

ஆதித்யா குடியிருந்த மனத்தில்-
புதிதாய் ஒருத்தி!
இவளை எனக்குத் தெரியும்...
என் வாத்தியார் மகள்!
நான் அவரிடம் ஐந்தாம் வகுப்புப் படித்தபோது இவள் பிறந்ததாய் ஞாபகம்.
நான் பட்டதாரியாகித் திரும்பிவந்தபோது இவள் பாவாடை தாவணியில் பாடசாலை மாணவியாக நின்றிருந்தாள்.
அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஆனால் பேசிக்கொண்டதில்லை. ஆணோ பெண்ணோ அவசியமில்லாமல் பேசிக்கொள்வது கட்டுப்படுத்தப்பட்டிருந்த ஊரின் சட்டம்..
அதுவும் குமரியும் இளைஞனும் தனியாய்ச் சந்திப்பது பேசிக்கொள்வது கட்டாயமாகத் தடைசெய்தே ஆகப்படவேண்டிய காரியம் என்று மூத்ததுகள் இயற்றிவைத்த சட்டம்...


பிற்போக்குத்தனம் என்று பலருக்குப் புரிந்தாலும் அதற்குள் நின்றே ஆகவேண்டும் என்று கருதியவர்களில் வானதியும் ஒருத்தி. இப்போது அந்தச் சட்டங்களையெல்லாம் இவளே மீறத் துணிந்துவிட்டாளோ என்னவோ...
"எங்களின்ரை மனசு எங்கடை கட்டுப்பாட்டிலை இருக்கும் எண்ட தைரியம் எங்களிட்டை இருந்தால் போதும்...நாங்கள் நடு ராத்திரியிலும் நாலுபேரோடை கதைச்சுக் கொண்டிருக்கலாம்."என்றாள் அவள் ஒருநாள்.

நான் அவளால் கவரப்பட்டேன்...
என்னாயிற்று எனக்கு?
ஆதித்யாவைக் கண்டால் ஆலிங்கனத்துக்காய்த் துடிக்கிற மனது இவளது அழகில் ஒரு தெய்வீகத் தன்மையையே காண்கிறதே...ஏன்...?
அவள் யாரோ நான் யாரோ என்று விட்டுவிட முடியாமல்-
அடுத்த சில தினங்களில் என்னில் மாற்றம் வந்தது நிறையவே!
அதற்குப் பிறகு-அவள் என்னை அடிக்கடி சந்தித்தாள்...என்னோடு நிறையப் பேசினாள்...
"வாழ்க்கை என்கிறது வெறும் சுகபோகங்கள் இல்லை...அதுக்கும் மேலாய் ஒரு ஆத்மார்த்தமான தேடல்...நேற்றைய நிகழ்வுகள் நாளைக்குப் பொய்யாய்ப் போய்விடலாம்...ஆனால் இண்டைய நமது காரியங்கள் நிஜம்...இதிலை ஏதேனும் சாதிக்க முடிஞ்சால் அதுபோதும்...இந்தச் சாதனைகள் நமக்கு நமக்கு என்டு ஆகாமல் மற்றவர்க்கு மற்றவர்க்கு என்டு இருக்கவேணும்...அந்தத் தொண்டிலை நாங்கள் மகிழவேணும்... அதிலை ஒரு ஆத்மதிருப்தி வரவேணும்.!"

-ஒரு குருவிடம் மாணவனுக்கிருக்கவேண்டிய பயபக்தி எனக்கு அவளிடம் வந்தது. அவளருகே அமர்ந்து அவளது போதனைகளில் மனத்தைக் கொடுத்து பேச்சடங்கி உள்வாங்குவதில் நான் ஆனந்தித்தேன்.

கருத்துக்கள் நெருங்க நெருங்க மனம் நெருங்கிப்போகிறது...மனம் நெருங்க நெருங்க உயிர் நெருங்கிப்போகிறது...உயிர் நெருங்க நெருங்க நீவேறு நான்வேறு என்ற உணர்வு சுருங்கிப்போகிறது...இயல்பாய் கருத்துக்களில் ஒத்துப்போகிற ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் காட்டுகிற நெருக்கம் பல சமயங்களில் விபத்துக்களில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது... குற்றம் யார்மீதும் சொல்லிவிடமுடியாது...எதற்கும் ஒரு எல்லையில்லாமல் போய்விட்டால் எல்லாமே எல்லைமீறிப் போய்விடுகிறது...

அவளுக்கு என்மீது இரக்கமிருந்தது...உண்மை! என்வாழ்வின் நலன்களில் அக்கறை இருந்தது...உண்மை! நான் நல்லவனாய் ஊர்போற்ற வாழவேண்டும் என்ற அக்கறை இருந்தது...உண்மை! ஆனால்-
என்னுள் ஆதித்யா இருந்தாள் என்பதைமட்டும் எப்படி அவளால் உணரமுடியாமற்போயிற்று.
அவள் உணரவில்லை என்றால் அது பொய்!
அல்லது உணர்ந்தும் உணராதவளாய்த் தன்னைக் காட்டிக்கொண்டாளா?
ஏதோ ஒன்று!
அவளையும் நான் நானாகவே இழந்தாகவேண்டிவந்தது...
ஆனால் அந்தப்பிரிவையும் அவள் எத்தனை பக்குவமாய் எடுத்துக்கொண்டாள்.
"எல்லா மனிசருக்கும் ஆசைப்பட உரிமையுண்டு...அது நிறைவேறுமா நிறைவேறாதா எண்டு கணக்குப் பார்த்துக் காரியம் பார்க்கமுடியாதபடி காலம் சிலசமயம் கண்களைக் கட்டிப்போட்டிடும்...உங்களிலை எனக்கு அன்பு இருக்கிறது மெய்...ஆனால் அதுக்காக உங்களை நான் உரிமையானவர் ஆக்கிக் கொள்ளவேணும் எண்ட எண்ணம் எனக்கு ஏன் வந்தது...? மெய்யாய் எனக்கு விளங்கேல்லை...ஆனால் ஒண்டுமட்டும் நிச்சயம்... நான் உங்களிலை வைச்சிருக்கிற அன்பு தூய்மையானது...அதை நீங்கள் புரிஞ்சுகொண்டால் போதும்!"
-அவள் கண்கலங்கினாள்...
அவளது விழிகளைத் துடைக்க நீண்ட என் கரங்களுக்கு எட்டாமல் அவள் தன்னைத் தூரப்படுத்திக்கொண்டாள்.
"வேணாம்...! நீங்கள் என்னைத் தொடவேணாம்... உங்களிலையிருந்து நான் தூரவிலகி இருக்கிறவரைக்கும் நான் வல்லமை படைச்சவளாய் இருப்பன்...உங்களுடைய விரல் என்னிலைபட்டால்கூட நான் உடைஞ்சு சிதறிப்போவன்...!"
-அவள் போய்மறைந்தாள்.


சிலகால இடைவெளிக்குப் பிறகு அவளை நான் மறுபடி சந்தித்துக் கொண்ட போது எங்கள் இருவர் மனத்திலும் ஒரு தெளிவு தோன்றியிருப்பதை நான் உணர்ந்தேன்.

"அண்ணை!" என்று அவள் என்னை அழைக்க ஆரம்பித்திருந்தாள்.
எந்த அன்புக்கும் கட்டாயம் ஒரு வடிவம் கொடுத்தே ஆகவேணும்.
அது இல்லாதபட்சத்தில் மனம் அலைபாய்வதை இலகுவில் கட்டுப்படுத்திவிட முடியாது.

5.
"கடலை முத்தமிடும் தொடுவானம்"என்று இளமையில் கற்பனை செய்யப்பட்ட வானம்...எப்போதும்போல் தொடாத கடலை தொட்டுவிட்டது போல் பாவனை காட்டிக்கொண்டு-எட்டாத தொலைவில் சரிந்துகிடக்கிறது. கரையைத்தொடும் அலைகளைக் காணோம்...இரக்கமற்ற மனிதர்கள் இதயத்தைத் திறந்துகாட்டினாற்போல் கற்களும் பாசியுமாய்க் கோலம்காட்டும் கடலின் முற்றம்.

சற்றுத்தொலைவில் கரைக்கும் தொடுவானத்துக்குமிடையே சத்தமின்றிப் புரளும் அலைகள்...மறுபடியும் அலைகள் கரையைத் தேடிவரும்....கடலின் நிலப்பரப்பைக் கண்ணுக்குத் தெரியவிடாமல் குளிர்ந்த நேரால் குசலம் விசாரித்து...கரையை முத்தமிட்டு மறுபடியும் திரும்பிப்போகும்.

இயற்கை இன்னும் மாறவில்லை...ஆனால்-
மனிதர்கள்....?
-தன்னந்தனியே நின்று சூழலை நோக்குகையில் தவித்துப்போகிறது மனது... ஆளரவமற்று வெறுமையாய் விரிந்து கிடக்கிறது நிலம்...வெய்யிலின் கொடுமை தாளாமல் முகம் கறுத்துப்போன தென்னைகள் பனைகள்... சற்றுத்தொலைவில்.

மறுபடி கட்டிநிமிர்த்த முடியாமல் இடிபாடுகளாய்ப்போன வீடுகள்... விழுந்துபோன வேலிகள்... தற்கால அரசியலின் சமதர்ம தத்துவத்தைப் புலப்படுத்தி சாட்சி சொல்கின்றன.
பசிதாளாமல் தாயைத்தேடிக் கதறும் குழந்தையாய் மனம் வீரிடுகிறது...
"எதற்கு...எதற்கு...எதற்கு...இதெல்லாம்?"

மாலைத் தென்றலின் இனிமையை இரசித்துக்கொண்டு..இந்தக் கரையோரத்தில் அமர்ந்து கற்பனைபண்ணிக் களித்திருந்த பொழுதுகள்... கவிதைபடித்த காலங்கள்...
இரவுப்பொழுது மெள்ளக்கவிகையில் என்னைத்தேடிவரும் அம்மா...
"எவ்வளவு நேரமாய் இங்கை உட்கார்ந்திருக்கப் போகிறாய்? எழும்பி வா!" கனவுகளாய்க் கலைந்துபோன காலங்கள்...
ஆனாலும் அதிவேகமாகவே!
எதுவும் நிஜமில்லை...எதுவும் நிரந்தரமில்லை...எதுவும் அர்த்தமுள்ளதில்லை... எல்லாமே பொய்...பொய்..பொய்தான்!
"எதுபொய்?" என்று மனம் மறுபடி விசாரிக்கத்தொடங்குகிறது.
"இப்போது நீ இங்கே நின்றுகொண்டிருக்கிறாயே இது பொய்யா?...நேற்று நீ இங்கு இல்லையே...அது பொய்யா?...எத்தனையோ நாட்கள் நீ இங்கு களித்திருந்த பொழுதுகள்...அவைகள் எல்லாம் பொய்யா..? அப்போது உண்மையாய்த் தெரிந்தவைகள் இப்போது மட்டும் பொய் என்றால்...? உன் சிந்தனைகள் பொய்யாய் இருக்கவேண்டும் அல்லது நீ புரிந்துகொண்டவைகள் பொய்யாய் இருக்கவேண்டும்...எது பொய்?"

வானத்துச் சூரியன் கோபத்தில் சிவக்க-
நிலமகளின் முகம் இருளடைந்துபோகிறது.
திரும்பி நடக்கிறேன்.
கரையைத் தாண்டி மணல் மேட்டில் கால்பதிக்கையில் என்னைக்கடந்து இரண்டுசிறுவர்கள் நடக்கிறார்கள்.
ஒருவன் சற்றுத் தாமதித்தான்.
"என்னடா..?"
-மற்றவன் கேள்வியுடன் திரும்ப என் பார்வை அவர்கள்மீது...
"மச்சான் ஆளைத் தெரியுதா?"
"தெரியேல்லை ஆர்?"
"இவன்தான் சண்டியன் சங்கரலிங்கம்."
"சண்டியனா...?இவனா...? பகிடிவிடுகிறை..! சும்மா முட்டினாலே விழுந்திடுவான் போலக் கிடக்கு...! ஒருவேளை ஈக்குச்சிச் சண்டியனோ?"
-கேள்வியில் நிறையவே கிண்டல்.
"மெய்யாய்த்தான் மச்சான்...இவன் பெரிய சண்டியனாம் அந்த நாளையிலை...! அம்மா நிறையச் சொல்லுவா இவனைப்பற்றி...!"
"சரி விடு...இவனைப்பற்றி இப்ப என்ன... நாங்கள் போவம்...வேலையள் நிறையக்கிடக்கு!"
-அவர்கள் நடக்கிறார்கள்...

எனக்குள் சிரித்துக்கொள்கிறேன்.
காலம் மாறிவிட்டது...நிறையவே!

ஒருகாலம்-
என் கால்பட்ட தெருவில் எறும்பூரப் பயந்ததுண்டு. அமைதியாய் கவிதை பாடிக் கொண்டிருந்தவனைச் சூழ்நிலை தன்பக்கம் இழுத்துக்கொண்டது.
கட்டிய மனைவியைக் காலுக்குள்போட்டு உதைத்த ஒருமனிதன் அப்போது என் அயல்வீட்டில் குடியிருந்தான். அவனைக் கண்டிக்க ஆருமில்லாதபோது அடிதடியில் இறங்கவேண்டிய ஒரு ஆள் அப்போது அங்கே தேவைப்பட்டான்.
"அடுத்தவீட்டு வம்பு நமக்கெதற்கு?" என்று எல்லோரும் தமக்குள் முனகிக் கொண்டபோது-
அந்தப் பெண்ணுக்கு ஆபத்பாந்தவனாய் நான் உருவெடுத்தேன்.
கட்டிய சாரத்தை சண்டிக்கட்டாய் மடித்து முடிச்சுப் போட்டுக் கொண்டேன்.
"வேணாமடா உனக்கு வீண்வம்பு!"என்ற என் தாயின் குரல் என் காதுகளை முழுதாய் எட்டுமுன்பு அடுத்தவீட்டில் புகுந்து அவனைத் துவம்சம் செய்துவிட்டுத் திரும்பிய மறுநாளில் இருந்து அவனில் நிறைய மாறுதல் வந்தது.

அவன் அமைதியானான்.
நான் உடல்பலத்தால் உலகாளமுடியும் என்று துணிந்தேன்.
அன்று முதல் நான் சண்டியன்.
இப்போது-
ஈக்குச்சிச் சண்டியன் என்று இந்தச் சிறார்கள் பட்டமளித்துப் போகிறார்கள்.
முன்பாயிருந்தால்-
இந்நேரம் இவங்களைப் பிடித்து நாலு சாத்துச்சாத்தி..அவர்களது வீடுகளுக்கு இழுத்துப்போய் அவங்களை பெத்ததுகளுக்கும் ரெண்டு சாத்துச் சாத்தி-"பிள்ளையளா பெறுகிறியள் பிள்ளையள்...மூத்தவன் இளையவன் எண்டு மட்டுமரியாதை தெரியாத மண்ணாங்கட்டியள்...தூ!"
-எவ்வளவோ நடந்திருக்கும்.

ஆனால்...இப்போது...?
மெல்லிதான ஒரு விரத்திச் சிரிப்புடன்...நான்...!
இளரெத்தங்களின் ஓட்டங்களுக்கு ஈடுகுடுக்க என்னால் முடியுமா என்ன?
இது இயலாமையா...அல்லது அனுபவங்கள் கொண்டுவந்து சேர்த்த மனப் பக்குவமா?
ஏதோ ஒன்று.
ஆனால் அந்த ஒன்றுமட்டுமே இப்போது என்னில் நிரந்தரமாகிவிட்டது.
வாழத்துடிப்பவனுக்கு வாழ்க்கை தேவை.ஆனால்- வாழ்வை வெறுத்தவனுக்கு?உலகத்தில் தேவையானது ஒன்றுமே இல்லை என்ற உணர்வு என்னுள்.

நலிந்துபோன உடல் இன்றைக்கோ நாளைக்கோ என்று என்னை நையாண்டி செய்கிறது. இழந்துவிட்ட காலங்களைப்போல் இழந்துபோன இளமையும்.
இனி என்ன?

ஒன்றும் கொண்டுவரமாட்டேன் என்று கைகளை இறுக்கி மூடியபடி பிறக்கும் மனிதன் ஒன்றையும் எடுத்துச் செல்லமாட்டேன் என்று விரல்களை விரித்தபடி கடைசிப் பயணத்தைத் தொடர்கிறான்.
உலகத்தில் உள்ளதெல்லாம் உலகத்துக்காகவே!
இங்கு வந்துபோகமட்டும் உயிர்களுக்கு உரிமை உண்டு.
நிரந்தரமாய்த் தங்க அல்ல.
கோயில்மணியோசை காற்றோடு கலந்துவந்து காதுகளைத் தழுவிச் செல்கிறது.
வானத்தைப் பார்க்கிறேன்...
நட்சத்திரங்கள் பூத்துக்கிடக்கின்றன...மெல்லிதாய்ப் படரத்தொடங்கிய இருள் பார்வையை முழுதாய் மறைக்குமுன்புவீட்டுக்குப் போயாக வேண்டும். நடக்கிறேன்.
"அண்ணை!"
எப்போதோ கேட்டகுரல். ஆனால் நெஞ்சுக்குள் நன்றாகவே பதிந்துபோன குரல்.

வானதி!
"அடையாளமே தெரியேல்லை இப்பிடி மாறிப்போனீங்கள்!"
"வருசங்கள் எத்தினையாச்சு வானதி...மாறினது நான்மட்டுமா.. நீயும் கூடத்தான்!"

"வசதிவந்தபோது சொந்த ஊரைவிட்டுப்போனம்...எங்கையும் நிம்மதி இல்லை. சொந்த ஊருக்கே வந்தாச்சு...அயலூருகளிலை அனாதையள்மாதிரிச் சாகிறதைவிட சொந்த ஊரிலை சுதந்திரமாய்ச் செத்தமெண்டு இருக்கட்டுமன்."
-வானதி சொன்னதில் விரக்தி இல்லை.ஒரு அழுத்தம் தெரிந்தது.

"இப்ப உன்னுடைய வாழ்க்கை...?"
"எனக்கென்னண்ணை...தாலிகட்டினவர் போயிட்டார்...எண்டாலும் நான் பெத்த பிள்ளையள் எனக்கு ஆறுதலாய் இருக்குதுகள்!"
"பிள்ளையள்?"
"ஓமண்ணை...ரெண்டு ஆம்பிளையள்...ஒரு பொம்பிளை...பெடியள் ரெண்டுபேரும் இயக்கத்திலை...மகள் கல்யாணம் முடிஞ்சு இப்ப நாலுமாசம்!"
"நல்லாயிரு...!"என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

"நீங்கள்தான் உங்கடை வாழ்க்கையைப் பழுதாக்கிப் போட்டீங்களோ எண்டு எனக்குக் கவலையாய் இருக்குது அண்ணை!"
"என்ரை வாழ்க்கையிலை நான் எவ்வளவோ சாதிச்சிருக்கலாம்தான்...!" -ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காலம் கடந்தாயிற்றே.
"உன் மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்?"
-அந்தக்கேள்விக்கு அவசியமென்ன வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. என்றாலும் கேட்டுவைக்கிறேன்.
வானதியின் பதில் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
"ஆதித்யா!"
"உங்களின்ரை பேரை என் மகன்களிலை ஒருத்தனுக்கு வைச்சுவிட வேணுமெண்டு முதலிலை நினைச்சன். ஆனால் அவங்களைக் கூப்பிடுகிற போது உங்கடைபேரிலை அவன்களை வாடா போடா எண்டு கூப்பிட முடியாதே... அதாலை உங்களுக்குள்ளை எப்பவும் நீங்காமல் இருக்கிற ஒரு பேரை என்ரை மகளுக்கு வைச்சிட்டன்..!"
"இப்ப அவளா தாயாகப்போறாள் எண்டு சொல்கிறாய்?"
"அவள்தான்!"
6.
"அம்மா...எனக்குப் பயமாய் இருக்கம்மா!"
என்னைச் சூழ்ந்து எதிரொலிக்கும் அந்தக் குரல்...
நான் அசையாமல் கருவறைக்குள் அமைதிகொள்கிறேன்...
"பிள்ளைத்தாய்ச்சி இப்பிடிக் கண்டதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது!...பிறகு வயித்துக்குள்ளை இருக்கிறதும் பயந்ததாய்த்தான் பிறக்கும்."

எங்கேயோ வெடிகுண்டுகள் வீழ்ந்து சிதறும் சத்தம் என் அமைதியைக் கெடுக்கிறது. அசைகிறேன்...
"அம்மா...ஆ!"
என்னைச்சுற்றி எதிரொலி...
"நான் பக்கத்திலைதானை இருக்கிறன்...பயப்பிடாதை ஆதித்யா!"
-புதிதாய் ஒரு ஆண்குரல்.

ஆதித்யா!
-வானதியின் மகள் ஆதித்யா.

-இந்த உலகத்தில் என்னைப் பிரசவிக்கக் காத்திருக்கும் என் புதிய தாய்!அவளருகில் ஆதரவுக்குரல் எழுப்பும் என் புதிய தந்தை...

நான் பிறக்கப்போகிறேன்....
புதிதாய்ப் பிறக்கப்போகிறேன்....

என் தாயகத்துக்கு நான் ஆற்றவேண்டிய கடமைகளை மறந்து என்சுகம் ஒன்றே குறியாக அலைந்தவன்... இனி ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ நான் மறுபடி பிறக்கப்போகிறேன்.


(முற்றும்)

Sonntag, Dezember 21, 2008

நம்பிக்கையின் ஒளி- (இசைநாடகம்)


























-இந்துமகேஷ்



காட்சி:1

இடம்:- பரலோகப் பேரவை.
பாத்திரங்கள்:-ஒளிவடிவில் இறைவன், இருள்வடிவில் சாத்தான், தேவதூதர்கள்.
(தேவதூதர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்)



தேவதூதர்கள்:
காலத்தை வென்றாய் போற்றி
கருணையின் வடிவே போற்றி
ஞாலங்கள் படைத்துக் காப்பாய்
நல்லருள் தருவாய் போற்றி
வானகம் நின்று வையம்
வளம்பெறச் செய்வாய் போற்றி
ஞானமே போற்றி எங்கள்
நாயகா போற்றி போற்றி!

(கரும் இறக்கைகளை விரித்தபடி சாத்தான் விரைந்து வருகிறான்)


சாத்தான்: (இறைவனின் எதிர்வந்து ஏளனமாய் நகைத்து)
வானம் உந்தன் ஆட்சி என்றால்
மண்ணில் எந்தன் ஆட்சி
மண்ணில்வாழும் மாந்தர் இன்று
எந்தன் கையில் வீழ்ச்சி!


இறைவன்:
சத்தியம் வாய்மை தர்மம் தழைக்குது
தரணியில்! அறிவாயா?
நித்தமுன் கொடுமைகள் நீக்கியே மானிடம்
காப்பேன் அறியாயா?
அற்பமாய் எண்ணினை அகிலத்தை! உன்கரம்
அதைத்தொட விடுவேனா?
அன்பினை வளர்ப்பவர் நெஞ்சங்கள் தகித்திட
அனுமதித் திடுவேனா?


சாத்தான்:
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயின
ஆயினும் கண்டதென்ன?
அங்குள்ள மானிடர் உன்னை நினைப்பதன்
காரணம் வேறு என்ன?
தன்னை உயர்த்தியே பிறரை விழுத்திடும்
தன்னலப் பேய் பிடித்தார்
தம்மில் மகிழ்ந்து களித்திட தந்தாய்நீ
இன்பங்கள் ஆதலினால்!


இறைவன்:
நீ
கண்டுவந்த மாந்தரிலே
யோபு எனும் என்னடியான்
இன்றிருக்கும் நிலை அறிவாய்.
சத்தியத்தில் உத்தமத்தைச்
சொத்தெனவே கொண்டவனை
தன்னலமென்றே புகன்றாய்!



சாத்தான்:(ஏளனமாகச் சிரித்து)
அள்ளி அள்ளி நீகொடுத்த
செல்வமது உள்ளவரை
வள்ளலென அவன் இருப்பான்.
மண்ணில் பெரும் புகழ் படைப்பான்.
உள்ளதெல்லாம் நான் பறிப்பேன்
உத்தரவு நீகொடுத்தால்
உன்னடியான் உள்ளம் புரியும்
அவன் உத்தமத்தின் நிலை தெரியும்.


இறைவன்:
சத்தியத்தைப் போற்றுமவன்
உத்தமத்தைக் காத்திடுவான்
சற்றும் அதை விட்டுவிலகான் - அவன்
உத்தமத்தை நீ அறிய
உண்மைநிலைதான் உணர
உள்ளதெல்லாம் நீபறிக்கிறாய்-அவன்
உயிரைமட்டும் நீ தவிர்க்கிறாய்.

(சாத்தான் சிரித்தபடி யோபுவைத் தேடிப் பறந்துபோகிறான்-
இருள் சூழ்கிறது)





காட்சி: 2
இடம்: யோபுவின் மாளிகை.
பாத்திரங்கள்: யோபு, யோபுவின் மனைவி, யோபுவின் நண்பர்கள் எலிப்பாஸ், பில்தாது, சோப்பார், பணியாள்.


(தனது நண்பா்களுடன் தனது மாளிகையில் விருந்துண்ண அமர்கிறான் யோபு
நண்பர்கள் அவனது பெருமைகளைப் போற்றிப் புகழ்கிறார்கள்.)


எலிப்பாஸ்: (யோபுவிடம்)
மாடிமனை கோடிபொருள்
மக்கள் பலருண்டு
மாடு ஆடு ஒட்டகங்கள்
ஆயிரமாய் உண்டு


பில்தாது:
ஓடி ஓடிச் சேவை செய்ய
ஏவலாளர் உண்டு
உன்புகழைப் போற்றுதற்கு
பாவலர்கள் உண்டு


சோப்பார்:
கூடிவரும் நண்பரென
நாங்கள் இங்கு உண்டு
கொற்றவன்போல் வாழுகிறீர்
என்ன குறை உண்டு.


யோபு: (நண்பர்களின் புகழ்ச்சிக்குப் பதிலாக)
மாற்றிமாற்றி என்னை நீங்கள்
போற்றுவதைத் தவிர்ப்பீர்
மண்ணில் எங்கள் ஆண்டவனின்
சத்தியத்தைத் துதிப்பீர்!
காற்று வெளி வானமெங்கும்
காண்பதவர் பொருளே
கண்ணில் ஒளியாய் இருந்து
காப்பதவர் அருளே!

சத்தியம் ஆனார் நித்தியம் ஆனார்
சர்வமும் அவர் ஆனார்
உத்தமத்தாலே உள்ளத்தை நிறைத்தார்
உயர்வினை எனக்களித்தார்
கர்த்தரைத் துதித்தேன்
கர்த்தரைத் துதிப்பேன்
கருணையின் வழிநடப்பேன்
சத்தியம் ஆனார் நித்தியம் ஆனார்
சர்வமும் அவரானார்.



(விருந்துண்ண ஆயத்தமாகிறார்கள். பணியாள் ஒருவன் வேகமாய் ஓடிவருகிறான்.)


பணியாள்: (பதட்டமாக)
அழையா விருந்தென வந்தேன்
பிழையே பொறுப்பீர் பிரபு!

(பதட்டத்துடன்)
எப்படி எடுத்துரைப்பேன்-அதை
எப்படி எடுத்துரைப்பேன்-உங்கள்
சொற்படி நடந்திடும் சிறியவன்
அதை இங்கு
எப்படி எடுத்துரைப்பேன்?
எப்படி எடுத்துரைப்பேன்
அதை நான்
எப்படி எடுத்துரைப்பேன்?




யோபு:
பாதிவிருந்தினில் பதறியே வந்தாய்
சேதி என்ன சொல்லு!
கொண்டுவந்த
சேதி என்ன சொல்லு!


பணியாள்:
எப்படி எடுத்துரைப்பேன்-
அதை இங்கு எப்படி---

நண்பர்கள்:
சொல்லு! சொல்லு! சொல்லு!

பணியாள்:
வானத்திலிருந்து நெருப்பு விழுந்தது
மாடுகள் ஆடுகளும்
மாசிலா உம்பணியாட்களும் மாய்ந்தனர்
நான்மட்டும் தப்பிவந்தேன்.
ஆசையாய் நீர்பெற்ற மக்களும் மாண்டனர்
வீசிய பெரும்புயலில் - ஐயனே
நீர்பெற்ற சொத்துக்கள் அனைத்துமே
அழிந்தன மிச்சமில்லை.


யோபு:(கண்களை மூடியபடி இறைவனை எண்ணி)
கர்த்தரே கர்த்தரே சித்த மிதுவோ?
காரிருள் சூழ்ந்ததோ எந்தன் வாழ்விலே!

எடுத்த உடலில் ஏதுமில்லாமல்
இங்கு நான் பிறந்துவந்தேன்.
கொடுத்தவர்நீரே எடுத்துக்கொண்டீரே!
குறையெனக் கொள்வேனோ?

சத்தியம் ஆனீர் நித்தியம் ஆனீர்
சர்வமும் நீர் ஆனீர்!
நித்தமும் துதிப்பேன் நித்தமும் துதிப்பேன்
நீரன்றித் துணை ஏது?



(திரை)



காட்சி:3
இடம்: பரலோக சபை
பாத்திரங்கள்: இறைவன், சாத்தான்.


இறைவன்:
சத்தியத்தில் உத்தமத்தைச்
சொத்தெனவே கொண்டவனைத்
தன்னலமாய் நீ உரைத்தாய். உன்
வித்தைகளைக் காட்டி அவன்
சொத்துகளை நீ அழித்தும்
சித்தமது மாறவில்லையே- அவன்தன்
உத்தமத்தில் நீங்கவில்லையே!


சாத்தான்:
தன்னுயிரைக் காக்கவென்றே
இன்னொருயிர் மாய்ப்பதற்கும்
சற்றும் சளைக்காத மனிதன்
தன்னுயிரைக் காப்பதற்கு
தன்னுரிமை யானதெல்லாம்
விட்டுவிடத் தயங்குவனோ?
இன்னுமவன் தேகத்திலே
வல்லமைகள் உள்ளவரை
என்ன செய்தபோதும் தளரான்
ஏற்றபடி நோய்கொடுத்து
தாக்கிஅடிப்பேன் கணமே
தூற்றிடுவான் உன்னை என்கிறேன்.


இறைவன்:
எத்தனைதான் துன்பம்வந்து
உற்றபோதும் உத்தமன்தன்
சத்தியத்தை விட்டுவிலகான்.


சாத்தான்:
பார்ப்போம்!
உத்தமனாம் யோபு இனி
உன்னைக்கடும் வார்த்தைகளால்
ஓலமிட்டுத் தூற்ற வைக்கிறேன்-கொடிய
வாதையிலே மாட்டி வைக்கிறேன்.

(மறுபடியும் சாத்தான் யோபுவைத் தேடிப் போகிறான்)

(திரை)




காட்சி: 4
பாத்திரங்கள்: யோபு, மனைவி, நண்பர்கள்.

(சாத்தானின் கொடுமைகளில் சிக்குண்டு சொத்து சுகமிழந்த யோபு, இப்போது கொடிய நோயினால் வேதனைகொண்டு தவிக்கிறான்.)

யோபு:
தாளாத துன்பம் தந்திட்ட போதும்
தளராது என்நெஞ்சமே
ஆனாலும் இன்று தீயாகவெந்து
அரிக்கின்ற தென் தேகமே!
ஏனிந்தக் கோலம் இது என்ன காலம்
ஏதொன்றும் அறியேனே நான்
எதுவந்தபோதும் இறை உந்தன் நாமம்
என்நாவு தினம் சொல்லுமே!


மனைவி: (கணவனின் துயர்கண்டு மனம்பொறாமல் சலிப்புடன்)
ஆண்டான் போல இருந்தீர்- இன்று
அடிமையைப்போல ஆனீர்
வேண்டாம் இந்த வாழ்்வெனச் சலித்து
வேதனையாலே சோர்ந்தீர்!
மீண்டும் பிறந்திட வேண்டாம்
வேதனைப் படவும் வேண்டாம்
ஆண்டவன் என்று துதித்துத் துதித்து
அல்லல் படவும் வேண்டாம்.




யோபு:
உயிர்வந்தபோது இறைவன்தன் கையால்
உருவாகும் பல நன்மையே.
உண்டாகும் இன்பம் தொடர்கின்றபோது
அவர்நாமம் தினம்பாடுமே!
நலம் சேரும்போது புகழ்பாடும் கூட்டம்
துயர்சேரப் பிரிந்தோடுமோ?
சுகம் தந்த தேவன் துயர்வந்தபோது
துணைசெய்யப் பின் நிற்பரோ?



















மனைவி: (கோபப்பட்டு)
செல்வம் தந்தார் சுகித்தீர்!
சேவைகள் ஆயிரம் புரிந்தீர்!
வல்லமைகெட்டு வாழ்க்கையும்கெட்டு
மற்றவர் இகழ்ந்திடப் படுத்தீர்!

கடவுள் ஒருவர் உளரேல்
கவலைகள் உமக்கேன் தினமே!
அட! இதைவிட்டு ஆத்திரப்பட்டு
அவரை நீ நன்றாய் திட்டு!
அமைதிகொள் உயிரைநீ விட்டு!
நீர் படும்பாடு என்மனக் கேடு
நிம்மதி உமக்கினி ஏது?
நிறைவினைத் தரவே
இறைவன் வரானே
நீ இனிக் கண்களை மூடு!


(போகிறாள்)

யோபு: (தனிமையில்)
இருளே! நீ மறைக!
இரவே! நீ தொலைக!
என்தாய் கருவில்
நான் புகுந்தேனே
அந்நாள் இரவே ஒழிக!
அந்தகாரமதைச் சூழ்க!
பிறவா திருந்தால்
துயரிலை வாழ்வில்
பிறந்தநாள் வாராதொழிக!
பேரிருள் அதனைச் சூழ்க!

கருவில் அழியாதிருந்தேன்
காசினிமீதில் பிறந்தேன்
உருவில் அழகாய் வளர்ந்தேன்
உண்மையே உலகென நினைந்தேன்.


இறந்தவர் யாவரும் இடுகாட்டினிலே
உறங்கிடும் பாக்கியம் பெற்றார் -அவர்
உலகினில் சமத்துவம் கற்றார்.
ஆண்டான் அடிமை பேதங்கள் இல்லை
அஞ்சுதல் தேற்றுதல் இல்லை.
ஒளியே இல்லா உலகம் அதுவே
உண்மையும் பொய்யும் அதுவே!
மரணம் வந்தால் தகுமே -எந்தன்
மனமும் இளைப்பாறிடுமே!



(நண்பர்கள் வருகிறார்கள்)


எலிப்பாஸ்:
இன்ப வாழ்வு வாழ்ந்த உம்மைத்

துன்பம் சூழ்ந்ததே
இருள்கவிந்து உந்தன் வாழ்வு
பாலை யானதே


சோப்பார்:
எந்தப் பாவம் வந்து இன்று
உம்மைச் சூழ்ந்ததோ
இறைவன் உம்மில் கோபம் கொண்டு
இதுவும் நேர்ந்ததோ?


பால்தாத்:
ஏழை கோழை யான மாந்தர்
வாழ உதவினீர்
இன்று துன்பம் நேர்ந்தபோது
சித்தம் கலங்கினீர்!


எலிப்பாஸ்:
வாழும் காலம் மாறக்கூடும்
மனதில் கொள்ளுவீர்!
வந்ததுன்பம் யாவும் தீரும்
பயத்தைத் தள்ளுவீர்!




யோபு:
இறைவனை இன்னும் கேட்பேன்
எந்தன் பாவம் எதுவோ?
அழுதிடும் எந்தன் குரலினைக் கேட்க
அவர் மறந்திருப்பதும் ஏனோ?


காற்றாய்ப் போனதென் வாழ்வு
கனவாய்க் கலைந்ததென் காலம்
தேற்றுதலின்றித் திகைப்பினில் ஆழ்த்தி
செய்வதும் நீர் ஏன் மாயம்?

இலக்காய் எனை நீர் எடுத்தீர்
எனையேன் சுமை என நினைத்தீர்?
வழக்காடிடவும் உமை எதிர்த்திடவும்
மாட்டேன் எனதுயிர் எடுப்பீர்!


பால்தாத்:
ஈரமின்றி நாணல் வளருமோ?
நீரிழந்து கோரை தழைக்குமோ?
இறைவனின்றி மனிதர் வாழ்வும்
இன்பம் எய்துமோ?
மனதால் உயர்ந்தவர்
நிலையால் தளரினும்
மறுபடி திடமொடு எழுவார்
வஞ்சகர் தீயினில் விழுவார்
இதுவே நியதி.
இறைவனை நினை நீ!
ஏற்றதை அவர் அறியாரோ?
இரக்கமுன்மேல் பொழியாரோ?


எலியாஸ்:
நம்பிக்கை கொள் எந்தன் நண்பா!
நடப்பது இனி நலமாகும்.


சோப்பார்:
அழுகுரல் நிறுத்து! துயரினைத் தடுத்து
அணைத்திட இறையவர் வருவார்-இனி
அன்பினை உன்மேல் பொழிவார்!


(நண்பர்கள் எழுந்து போகிறார்கள். வேதனையால்துடித்து பரிதவிக்கிறான் யோபு. இறைவன் குரல் எழுகிறது)


இறைவன்:
எழுவாய்! யோபு! எழுவாய்!
என்னடியானே எழுவாய்!
மறைவாய் இருந்தேன்
மனதினை அளந்தேன்!
மறுபடி வாழ்வினை அளித்தேன்!
வாழ்ந்திட அனைத்தையும் கொடுத்தேன்!

துயரினில் கருகியபொழுதிலும்
எனதடி தொழுதிட மறந்தனையிலையே!
தூற்றவும் நினைந்திடவிலையே!
அருளினன் சுகமொடு
ஆற்றலும் ஆயுளும்
அன்பனே எழுந்து நீ வருக!
அகிலமே புகழ்ந்திட வளர்க!

(திரை)




(பரிசுத்த வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள சத்தியவந்தனான யோபுவின் சரிதத்தை மையப்பொருளாகக்கொண்டு இசைநாடகமாக வடிவமைத்துள்ளேன்.
இந்நாடகம் பிறேமன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் 1998இல் நடாத்தப்பெற்ற ஒளிவிழாவில் "மாறாதமனங்கள்" என்னும் தலைப்பிலான எனது சமூக நாடகத்தோடு இணைக்கப்பட்டு பிறேமன் நகரத் தமிழ்க் கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது- இந்துமகேஷ்)


(பிரசுரம்: பூவரசு கவிதைச் சிறப்பிதழ் 2003மார்கழி)

Freitag, Dezember 05, 2008

வானுறையும் தேவனவன் வந்தான் இம் மண்ணுக்கு!



















வானுறையும் தேவனவன்
வந்தான் இம்மண்ணுக்கு!
(குறுங்காவியம்)


-இந்துமகேஷ்.



வானுறையும் தேவனவன்
மானிடனாய் உருவெடுத்து
பூமிக்கு வந்த கதை
புதிதல்ல நமக்கெல்லாம்.
என்றைக்கோ இவ்வுலகைப்
படைத்திட்ட நம் இறைவன்
இன்றைக்கும் அன்றைக்கும்
என்றைக்கும் வாழ்கின்றான்
ஆதாமும் ஏவாளும்
ஆக்கிவைத்த சந்ததியில்
வந்து பிறந்தோம் நம்
பாவங்கள் தொலையவில்லை.
பாவங்கள் தீர்த்து அன்புப்
பாதையிலே நமை அழைத்து
வேதங்கள் சொல்லி
விண்ணுலக வாழ்வு தரப்
பாலகனாய் எங்கள்
பரமன் பிறந்து வந்தான்.
ஏசு அவன் நாமம்
எப்போதும் இறைவனது
நேச குமாரன்
நினைப்போம் அவன் கதையை!

அழகுமிகு உலகத்தை
ஆக்கி வைத்தான் நம் இறைவன்
அனுபவித்து மகிழ்வதற்கு
ஆயிரமாய் இன்பங்கள்
கொட்டிக் கொடுத்து
குவலயத்தில் மனிதர்தமை
விட்டுவைத்தான் ஆனால் நாம்
தொட்டதெல்லாம் துன்பங்கள்
தொடர்வதெல்லாம் வேதனைகள்
பட்டுப் பரிதவித்துப்
பாரினிலே அலைகின்றோம்
பாவங்கள் தீர்வதற்குப்
பாதையினைத் தேடுகிறோம்.
பாதையது ஒன்றுண்டு
பாரினிலே நமைப்படைத்த
தேவனவன் திருவடியைத்
தினம்தோறும் பணிவதுதான்
பாவத்தைத் தீர்க்கும்வழி
பாங்கான இலகுவழி.
எத்தனைபேர் அதை அறிவோம்....
சத்தியத்தைக் கண்டடைவோம்?
"எங்கே கடவுள்?"என்று
இன்றைக்கும் கேட்கின்றார்
"இங்கே நான் இருக்கின்றேன்!"
என்றிறைவன் சொன்னாலும்
நம்பாத மானிடர்கள்
நமக்குள்ளே எத்தனைபேர்?


இன்றைக்கு மட்டுமல்ல
அன்றைக்கும் இதே கதைதான்....

வானத்துத் தேவனவன்
மானிடர்க்கு வாழ்வு தர
பூமிக்கு வருவதற்குப்
புதுநேரம் பார்த்திட்டான்
கற்போடு பண்போடு
கருணைநிறை நெஞ்சோடு
வாழ்கின்ற மங்கையர்கள்
வரிசையிலே ஒருதாயைத்
தேடி அவன் வந்தான்.
திருமணத்தைக் காணாத
கன்னி மரியாளின்
கர்ப்பத்தில் குடி கொண்டான்..
கன்னி மரியாளைக்
கணவனாய்க் கரம்பற்றி
வாழ்வதற்கு வந்த
மானிடன் யோசப்பு
கர்த்தரின் எண்ணத்தைக்
கனவிலே கண்டு கொண்டான்...
கன்னி மரியாளைக்
கலவாமல் அரவணைத்து
காதல் மணம் கமழக்
காத்திருந்தான் அன்போடு....






(காட்சி 1)

யூதேயா நகரிலுள்ள பெத்லகேம் நகரில் ஓர்நாள் ஓர் அந்திப் பொழுது....
மரியாள்,- (பிரசவவேதனையுடன்)
வலிதாள முடியவில்லை யோசப்- தேவன்
வரும்வேளை இதுவோ?


யோசப்பு,- (ஆதரவாக)
பொறு மரியாள்.... ஒரு
மறைவிடம் தேடி வருகிறேன்....


(முன்னால் போய் எதிர்ப்படுவோரிடம்)
நாசரேத் நகர்விட்டு
நானும் என் மனையாளும்
குடிமதிப்பு எழுதுதற்காய்
பெத்லகேம் நகர் வந்தோம்
சத்திரத்துத் திண்ணையிலே
தங்கி இருக்கின்றோம்....
பிரசவவலி கொண்டு
என்மனையாள் துடிக்கின்றாள்
தங்குதற்கு சிறுபொழுது
இடம்தந்தால் பேருதவி....



ஒருத்தி,-
சேச்சே...போ!
நான் யாரோ நீ யாரோ...
நமக்குள்ளே உறவென்ன...?
சத்திரத்துத் திண்ணையிலே
தலைசாய்த்துப் படுத்திட்டால்
பிள்ளை பிறக்காதோ..
பிறகெதற்கு வீடுனக்கு?
யோசப்பு,-
ம்.... நானும் மனிதன்தான்
மனிதனைத்தான் தேடுகிறேன்....


மரியாள்,- (வலியுடன்)
யோசப்.....யோசப்.....


யோசப்பு,-
துன்பம் புரிகிறது
கொஞ்சம் பொறு மரியாள்
தஞ்சம் அளிக்க ஒரு
தாயுள்ளம் இருக்காதா?


இன்னொரு பெண்,-
ஏனில்லைத் தம்பி....
நானும் ஒரு தாய்தான்....
ஆனால் எனக்கென்று
வீடேதும் கிடையாதே...
யோசப்பு,-
உலகம் இதுதானே....
உள்ளவர்க்கு மனம் இல்லை....
இல்லாத கையர்க்கோ
ஏராள மனம் உண்டு....!


மரியாள்,-
யோசப்......யோ....ச....ப்.....

இன்னொரு பெண்,-
பெண்ணாகப் பிறந்தாலே
பெரும் பாரம்
(மரியாளை அணைத்தபடி யோசப்பிடம்)
தம்பி நீ இங்கே வா
நேரத்தைப் போக்காதே...
நெஞ்சத்தில் கருணையிலார்
கொஞ்சமும் இரங்கார்கள்
இப்போதைக் கென்ன ஓர்
மறைவிடம் தான் தேவை...
அங்கே பார் ஒரு தொழுவம்
அதுவும் ஓர் மறைவிடம்தான்!
(மரியாளை அணைத்தபடி மாட்டுத் தொழுவத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள்)


யோசப்,- (தனக்குள்)
மாட்டுத் தொழுவத்தில்
வைக்கோல் படுக்கையிலே
மன்னா நீ பிறப்பதற்கோ
நாள் குறித்தாய்?
உலகமெலாம் நீ அமைத்தாய்
உயிர்களெல்லாம் நீ படைத்தாய்....
மேலான தேவன் நீ...
மிகு ஏழ்மைக் கோலத்தில்
மானிடனாய் எங்கள்
மைந்தனாய் வருவதும் ஏன்?
உன்னை அறிந்தும்
உணர்வில்லா மந்தைகளாய்
வாழ்கின்ற மானிடரின்
மயக்கம் கலைப்பதற்கோ?
தன்னைக் கொடுத்து நல்
சத்தியத்தைக் காப்பவர்கள்
உன்னை யடைந்து
உய்வர் எனச் சொல்லுதற்கோ?
ஏனென்று அறியேன் நான்
எங்கள் குலக்கொழுந்தாய்
வருவேன் எனச்சொன்ன
வாய்மொழியே போதுமையா!
(குழந்தையின் அழுகுரல் கேட்கிறது)
ஓ....ஜீஸஸ்





காட்சி 2.
(ஆடுகள் மெல்லிதாய்க் கத்தும் ஓசை. மேய்ப்பர்கள் மூவர். இருவர் விழித்திருக்க ஒருவன் தூங்குகிறான்)

முதலாமவன்,-
இங்கேபார் தூக்கத்தை....
இவனெல்லாம் ஒரு மேய்ப்பன்.....


இரண்டாமவன்,-
சும்மா போ...
அவன் மந்தை
சொல்வதெல்லாம் கேட்குதுகள்
கட்டி உணவளித்தால்
கத்தாமல் நிக்குதுகள்...
எங்களதைப் போல
இடறுகிற ஆடுகளா?


முதலாமவன்,-
என்றாலும் மேய்ப்பர்கள்
இப்படித் தூங்குவதா?
தட்டி எழுப்பு....


இரண்டாமவன்,-
ஏய்.....ஏய்....ஏய்.....
(தூங்குபவனைத் தட்டுதல்)


மூன்றாமவன்,- (தூக்கக் கலக்கத்துடன்)
என்னடா.... சும்மா
ஏன் என்னைத் தட்டுகிறீர்...?


முதலாமவன்,-
மந்தையைக் காக்க வந்து
வாய்பிளந்து தூங்குகிறாய்....


இரண்டாமவன்,-
நாய்நரி வந்தால்....?


மூன்றாமவன்,-
என் ஆடு
உன் ஆடு போலில்லை
என் ஆடு தூங்காமல்
தானே விழித்திருந்து
தனைக் காக்கும்!



(தேவதூதன் வருகை)
மூவரும்,-
என்ன அது புதுச்சத்தம்?
புயலோ....புதுக்காற்றோ...?


முதலாமவன்,-
புரியவில்லை...


இரண்டாமவன்,-
அங்கே பார்!


தேவதூதன்,-
அச்சப்படவேண்டாம்...


மூன்றாமவன்,-
ஐயோ கதைக்கிறதே!


முதலாமவன்,-
பேயாய் இருக்குமோ?


இரண்டாமவன்,-
பிணந்தின்ன வருகிறதோ?


மூன்றாமவன்,-
ஆடுகளை யெல்லாம்
அதற்குக் கொடுப்போமா?


தேவதூதன்,-
அச்சப்பட வேண்டாம்...
கர்த்தரின் தூதன் நான்
எல்லோர்க்கும் ஒரு சேதி
இனிப்பான புதுச் சேதி...


மூவரும்,-
எங்களுக்கு மட்டுமா?


தேவதூதன்,-
இல்லை!.... உலகமெல்லாம்
இருக்கின்ற மானிடர்கள்
ஆனந்தத்தால் துள்ளி
ஆர்ப்பரிக்கும் சேதி அது!


மூவரும்,-
என்ன அது...? சொல்லுங்கள்....!


தேவதூதன்,-
உங்களுக் கெல்லாம்
உய்வுதரும் இரட்சகராய்
கிறிஸ்து எனும்தேவன்
உமதூரில் பிறந்திட்டார்....


மூவரும்,-
இங்கேயா எமதிறைவன்
வந்து பிறந்தார்...?


தேவதூதன்,-
மாட்டுத் தொழுவமொன்றில்
வைக்கோல் படுக்கையிலே
துணிகளினால் சுற்றி
முன்னணையில் கிடக்கின்றார்
அதுவே அடையாளம்
அங்கவரைக் காண்பீர்கள்!
(மறைதல்)



முதலாமவன்,-
கண்டது.. நாமென்ன
கனவோடா?


இரண்டாமவன்,-
இல்லை யில்லை....


மூன்றாமவன்,-
போயங்கு பார்ப்போம்
புறப்படுங்கள்..



காட்சி3
(மூன்று மேய்ப்பர்களும் மாட்டுத்தொழுவத்தைத் தேடிவந்து உள்ளே நுழைதல்)
யோசப்பு,-
யார் நீங்கள்?

மூவரும்,-
மந்தைகளைக் காத்து
வழிநடத்தும் மேய்ப்பர்கள்

யோசப்பு,-
இங்கென்ன தேடிவந்தீர்?

மூவரும்,-
வான் வெளியில் ஒருசெய்தி
நாம் கேட்டோம் ஓடிவந்தோம்.

யோசப்பு,-
சேதியா?

முதலாமவன்,-
ஆம் ஐயா
தேனான சேதி அது...

இரண்டாமவன்,-
எங்கள் இறைவன்
இங்கு வந்து பிறந்தாராம்!

யோசப்பு,-
சொன்னது யார்?

மூன்றாமவன்,-
மேகத்திலிருந்து ஒருவன்
இறங்கி வந்தான்...
மேலான சேதி என்றான்....

முதலாமவன்,-
தேவன் பிறந்திருக்கும்
சேதியையும் அவன் சொன்னான்....

மூவரும்,-
பார்க்கவும் துதிக்கவும்
பாடவும் ஓடிவந்தோம்....

யோசப்பு,-
வாருங்கள் வந்து
பார்த்துக் களித்திடுங்கள்.

(மரியாள் அமர்ந்திருக்க அவளருகில் யோசப்பு பாலக யேசுவைப் பவ்வியமாய்க் கையிலேந்தி மேய்ப்பருக்குக் காட்டுகிறார்.)





















(பிறேமன் நகரில் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியத்தினால் வருடாந்தம் நிகழ்த்தப்பெறும் ஒளிவிழாவில், இளையோர் பங்குகொள்ளும் பாலன் பிறப்புக் குறித்த சிறுநாடகமாக 1993ம் ஆண்டு மேடையேற்றப்பட்டது.)
(பிரசுரம்: பூவரசு மார்கழி 1995)

Montag, November 24, 2008

புகழேந்திகள்!









-இந்துமகேஷ்





பேட்டிகாண வந்த அந்த ஜெர்மானிய இளைஞனின் முகம் ஒருவித ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறது.

„கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழியாம்“ என் தாய்மொழி பற்றி,„மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த“ என் தாய்நாடுபற்றி „வந்தாரை வரவேற்று நொந்தாரை மகிழ்வூட்டி“ வாழ்ந்த என் இனம் பற்றி„மருந்தோடாயினும் விருந்தோடுண்“ என்று விருந்துபசாரத்தில் முன்னணிவகிக்கும் என் சனம் பற்றி எல்லாப் பெருமைகளையும் எடுத்துச் சொல்லியாயிற்று.

„இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களா..தமிழர்கள்?“ என்று அதிசயித்து விழித்த அந்த இளைஞனின் நீலவிழிகளில் பூத்திருந்த ஆச்சரியம் எனக்குப் புதிதான ஒன்றல்ல.

இப்படித்தான் என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் எங்கள் பெருமைகளைச் சொல்லி அவர்கள் வியந்துகொள்கிறபோது என்னுள்ளும் ஒருவித பெருமிதம் வந்தமர்ந்துகொள்ளும்.

„உங்கள் கலாச்சாரம் பண்பாடு விருந்தோம்பல் இறைவழிபாடு எல்லாமே அற்புதம். அருமை!“
-வார்த்தையளவில் இல்லாமல் மனம்திறந்து வெளிப்படுத்தப்படுகின்ற அவர்களது பாராட்டில் மனது குளிர்ந்துபோகும்.

„நான் சொன்னது கொஞ்சம்தான். சொல்வதற்கு இன்னும் ஏராளம் இருக்கிறது!“

„மெய்யாக..?!“ என்ற அவனது கேள்வியில், „இருக்கும்!“ என்று அவன் ஒத்துக்கொள்கிற பதிலும் இருந்தது.

பேட்டி முடிகிற தருணம் வந்தது-
நன்றிகூறி எழுந்துகொண்டவன் எதையோ நினைத்துக்கொண்டு மீண்டும் அமர்ந்தான்.

„உங்களிடம் முக்கியமான ஒரு கேள்வி... எங்கள் நாட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?“அவன் தனது நாட்டைப்பற்றி எனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்தான்.

„சுருக்கமாகச் சொல்வதானால் நல்ல நாடு.. நல்ல மனிதர்கள்.!“ என்றேன்.
அவன் மௌ்ளப் புன்னகைத்தான்.
„தனிமனித சுதந்திரத்திற்கு இங்கு எந்தத் தடையுமில்லை என்பது இந்த நாட்டின் பெருமைகளில் ஒன்று.“ என்றேன்.
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான்:
„ஆனால் இங்கே கட்டுப்பாடுகள் அதிகம்.“

„சுதந்திரம் அதுதான்!;“ என்றேன்.

„கட்டுப்பாடுகளையா சுதந்திரம் என்கிறீர்கள்?“

„பின்னே இல்லையா.. கட்டுப்பாடுகளை மீறி கட்டாக்காலிகளாய் அலைவதற்குப் பெயர் சுதந்திரம் இல்லை. ஒருவனுக்கு தான் விரும்பிய எதையும் செய்வதற்கு எத்தனை உரிமையுண்டோ அதேயளவு அந்தக் காரியங்களால் அடுத்தவருக்குத் துன்பம் வராமல் பாதுகாத்துக்கொள்வதும் அவசியமல்லவா? மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காமல் பாதுகாக்கத்தானே கட்டுப்பாடுகள்.!? அடக்குமுறைகளை எதிர்க்கலாம். ஆனால் கட்டுப்பாடுகளைத் தகர்த்துவிடக்கூடாது. சமுதாய நலனுக்கான கட்டுப்பாடுகள் எந்தக் காலத்திலும் பாதுகாக்கப்படவேண்டியவை. இந்தக் கட்டுப்பாடுகளை மதிக்கும் இந்த நாட்டின் பண்பு எனக்குப் பிடித்திருக்கிறது!“
அவன் விவாதத்தைத் தொடராமல் எழுந்தான்.
„விடைபெறுகிறேன்!“ என்று என் கையைப் பற்றிக்கொண்டான். சட்டென ஏதோ நினைவுவந்தவனாய் மீண்டும் அமர்ந்தான்.

„கேட்கமறந்துவிட்டேன்.. முக்கியமான ஒரு கேள்வி!“
„கேளுங்கள்!“

„எத்தனையோ சிறப்புக்கள் மலிந்த உங்கள் சொந்தநாட்டைவிட்டு நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்?“

அந்தக்கேள்வி என்னுள் அம்பெனப் பாய்ந்தது-இத்தனை மணித்துளிகளாய் நிலவியிருந்த மகிழ்வும் பூரிப்பும் பட்டென என்னிலிருந்து அகன்றோடியது. நீ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவேண்டாமே என்பதுபோல அவனைப் பார்த்தேன்.
என்னில் படிந்த துயரத்தை அவதானிக்காதவனாய் அவன் இன்னும் அதே புன்னகையோடு எனது பதிலுக்காகக் காத்திருந்தான்.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக் குழிக்குள் எதுவோ வந்து அடைத்தது.
„நாட்டுப் பிரச்சனைகளால் ஓடிவந்த அகதிகளில் நானும் ஒருவன்!“
தணிந்தகுரலில் சொல்லிவிட்டு அவன் முகம்பார்க்க முடியாமல் எங்கோ வெறித்தேன்...

ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால், அலையெறிந்து விளையாடும் கடலால் சூழப்பட்டுஅழகுகாட்டிக் கொண்டிருக்கும் என் தீவு என் மனவெளியில் மிதந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது.
000

(பிரசுரம்: புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றிய மலர் 2006)



Dienstag, Oktober 14, 2008

ஒரே ஒரு கதை!














-இந்துமகேஷ்








எப்படி ஆரம்பிப்பது?

''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!"
"வேண்டாம்... சரித்திரக் கதைகள் இப்போது சலிப்பைத் தரும்!"
"ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு சிங்கம்!"
"சிங்கமா..? அதுவும் ராஜா... மிருகங்களின் ராஜா!"
"விடுவோம். வேறு கதை?"
"ஒரேயொரு ஊரிலே ஒரேயொரு மந்திரவாதி!"
"மாயா ஜாலம்? ம்... ம்..!"

"மந்திரவாதி அங்குள்ள அரசகுமாரிமீது மையல்கொண்டான். அவளைக் கவர்ந்து வருவதற்காக ஒரு முனிவனைப்போல் வேடமிட்டு..."
"பிறகு? பிறகு?"
"பிறகு என்ன... அங்கு வேட்டைக்கு வந்த ஒரு அழகிய இராஜகுமாரன் வழியில் எதிர்ப்பட்டு அவளைக் காப்பாற்றிக்கொண்டு போக... சுபம்!"

"போரடிக்குது..!"
"என்ன?"
"கதை! உந்தக் கதை!"
"முந்தி எழுதினவங்கள் ஒருத்தனும் ஒண்டைக்கூட மிச்சம்விட்டு வைக்கேல்லை! எழுதிப்போட்டாங்கள்... எல்லாத்தையும் எழுதிப்போட்டாங்கள்!"
"எல்லாத்தையும்..?"
"ம்... எல்லாத்தையும்..."
"அப்ப விடு எழுதவேண்டாம்...!"
"சரி!"

"எனக்கு ஒரு சந்தேகம்!"
"என்ன?"
"நாங்க இப்ப வாழ்கிறம்"
"ஓம் வாழ்கிறம்."
"எங்களுக்கு முந்தியும் சனங்கள் வாழ்ந்துது!"
"ஓம்!"
"இப்ப அவையள் இல்லை!"
"ஓம்... இல்லை!"
"ஆனால் நாங்கள் இருக்கிறம்!"
"இருக்கிறம்!"
"முந்தி இருந்தவையைப் போலத்தான் பிறந்து வளர்ந்து படிச்சு உழைச்சு கலியாணம் முடிச்சு பிள்ளையளைப் பெத்து...!"
"இது இயற்கைதானை?!"
"அப்ப நாங்கள் இருந்தமோ இல்லையோ... உலகம் இருக்கும். உயிர்கள் இருக்கும். வாழ்க்கை இருக்கும்..!"
"அதுக்கென்ன?"
"ஆரும் ஒரு முழுமையான வாழ்க்கை வாழமுடியாது... முழுக் கடமையை முடிச்சிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடவும் முடியாது! இருக்கும்... எச்சங்கள் இருக்கும்... எப்பவோ ஆரும் அறியாத ஒரு மனிசன்ரை எச்சங்களாய் இண்டைக்கு எத்தனை கோடி மனிசர்... இனியும் பல கோடியாய் பல்கிப்பெருகி...!"
"இப்ப என்ன சொல்லவாறை?"

"எழுது... எத்தினையோ கதைகள்... ஒவ்வொருத்தரைச் சுற்றியும் எத்தனையோ கதைகள்... எல்லாத்தையும் எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்கள் என்கிறதிலை உண்மையில்லை... எழுதலாம் எழுது!"

பேனையைக் கையில் எடுத்தாயிற்று...
"என்னை எழுதப்போகிறாயா? "என்று எத்தனை முகங்கள்...
உண்மைக் கதை எழுதக்கூடாது... ஆனால் படிக்கிறபோது உண்மைமாதிரி இருக்கவேணும்...

இலங்கை வானொலியில் முந்தியொருக்கால் கேட்ட பகிடி நினைவுக்கு வருகிறது...
அப்புக்குட்டியும் உபாலியும்...
வீட்டிலை அப்புக்குட்டியின் மனைவி இல்லாத நேரம்...
உபாலியும் அப்புக்குட்டியும் கொஞ்சநேரம் தண்ணி அடிச்சு கோழிக்கறி சாப்பிட பிளான் போடுகிற சமயம்...
அப்புக்குட்டியின் மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வாத்தியார் கேட்ட கேள்வியுடன் வீட்டுக்கு வருகிறான்.
கேள்வி...
'கோழிக்கு ஏன் கோழியெண்டு பேர் வந்துது?'
அப்புக்குட்டி முளிசுகிறார்.
"உபாலி சொல்லனடா!"
உபாலி மாட்டிக்கொள்கிறார்...
"அதிங் வந்திங்... இந்தக் கோளிக்கு ஏன் கோளிண்டு பேர் வந்துது.. அதானே? அதிங் இந்த மொத மனிசன் கோளியைப் பாக்கேக்குள்ளை அதிங் கோழிமாதிரி இருந்துதிங்... அதான் கோளிண்டு பேர் வந்துது...!"

கோழிமாதிரி இருந்தால் அது கோழி...
கதைமாதிரி இருந்தால் அது கதை...

யாரையும்பற்றி எழுதக்கூடாது...
சரியில்லை... அது மனிதாபிமானமும் இல்லை...
ஆனால் எழுதித் தொலைத்த பிறகு இது யாரையோ சொன்னதுபோல் இருக்கிறதே என்றால்... பாவம் கதை...!
ஆகவே யாவும் கற்பனை என்று அடிக்குறிப்புப் போட்டுவிட்டால் பாதுகாப்பு... இந்த அடிக்குறிப்புகளுடன்தான் பலர் உண்மைக் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...

'என்னை எழுது' என்று சொன்ன எல்லா முகங்களையும் பின்னால் தள்ளிவிட்டு... ஒரு முகம்...
ஒருமுகம் என்றுதானே சொன்னேன்...
அது பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று எப்படி ஊகித்துக் கொண்டீர்கள்?
பெண் என்றாலே கவர்ச்சி என்று மற்றொரு பொருள் உண்டு...
ஆணென்பதால் இப்படிச் சொல்கிறேனா?
இல்லை. பெண்ணுக்கும் பெண்தான் கவர்ச்சி!
நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போய்ப்பாருங்கள்...
பெண்ணை ஆண்மட்டும் கவனிப்பதில்லை...
பெண்ணைப் பெண்ணும்தான் கவனிக்கிறாள்... ஒரு பெண்ணின் நடை என்ன உடை என்ன பாவனை என்ன என்பதையெல்லாம் ஒரு ஆணைவிட இன்னொரு பெண்ணே அதிகமாய் அவதானிக்கிறாள்...
ஆக பெண்களைக் கவர்வதற்கும் பெண்ணால்தான் முடிகிறது...
ஆகவே பெண்ணுக்கு மறுபெயர் கவர்ச்சி...

உங்களுக்கு ஒருவேளை இந்தக் கதையின் நாயகி கவர்ச்சியில்லாதவளாக அழகில்லாதவளாகத் தோன்றலாம்... அதற்காக எனக்கும் அப்படித் தோற்ற வேண்டுமா என்ன?
என்ன கறுப்பி என்பீர்கள்...
நிறங்களில் கறுப்பும் ஒரு நிறம்தான்...
உங்கள் தலைமுடி, கண்விழி எல்லாம் கறுப்புத்தான். பிடுங்கியா எறிந்துவிட்டீர்கள்? உங்கள் கண்ணுக்கு முன்னாலேயே அப்பிள் நிறத்து ஐரோப்பியப் பெட்டை கானாக்காரனின் கையைப் பிடித்துக்கொண்டு போகும்போது அந்தக் கறுப்பன்மேல் உங்களுக்கு ஒரு பொறாமை தோன்றவில்லை?
கறுப்பு என்னய்யா கறுப்பு...
என்ன கொஞ்சம் கட்டை என்பீர்கள்...
ஜப்பான்காரன் கட்டைதான். அவன் சாதித்ததில் பாதியாவது உங்களால் சாதிக்க முடிந்ததா?
பிறகென்ன கட்டையும் குட்டையும்...
இப்படி ஒண்டொண்டும் குறைசொல்லிக் கொண்டிருந்தால்...
விடுங்கோ...!
இவள் அவ்வளவு வடிவில்லை.
ஆனால் இவளோடை பழகத் தொடங்கினவைக்கு சாகும்வரைக்கும் இவளோடையே கூட இருக்கவேணும்போலத் தோன்றும்.
அப்படி ஒரு எளிமை. இளகின சுபாவம்.
வெளிநாட்டில ஒரு நல்ல மாப்பிளையாப் பார்த்துப் பேசி இவளைப் பெத்ததுகள் இங்கை அனுப்பிவைக்க இங்கை அவன் கொஞ்சக்காலம் இவளோடை ஒண்டாய்க் குடும்பம் நடத்திப்போட்டு வேறை ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கனடாவுக்கு மாறிட்டான். அங்கை போய்த் தம்பி நிறையப் பிரச்சினையளிலை சிக்குப்பட்டுக் கடன்காரனாகி திரும்பியும் இவளிட்டையே வந்திட்டேர்... என்ன செய்யிறது... எவ்வளவுதான் துரோகம் செய்தாலும் தமிழ்ப்பெட்டை தன்ரை பண்பை மறப்பாளே? புருசனை மன்னிச்சு ஏற்றுக்கொண்டாள்... ஆனால் கனகாலம் ஒண்டாய் இருக்க முடியேல்லை... பொலிஸ்வந்து ஆளைக்கொண்டுபோய் உள்ளுக்கை வைச்சிருக்குது...
'ஏனாம்?'
இவனிலை ஒரு பிழையுமில்லை... ஒருநாள் இவன் தனிய றோட்டிலை நிக்கேக்குள்ளை ஆரோ ஒருத்தன் ஒரு சூட்கேசைக் கொண்டுவந்து இவன்ரை கையிலை குடுத்திருக்கிறான்... ஆர் எவர் எண்டு விசாரியாமல் இவனும் அதை வாங்கிட்டான்... பொலிஸ்வந்து ஆளைப் பிடிச்சுப் பார்த்தால்- மருந்து. இப்ப மாப்பிள்ளை உள்ளுக்கை.
அப்ப பெட்டை?
என்ரை புருஷன் நல்லவர் ஒரு பாவமும் அறியாதவர் எப்பிடியும் அவரை நான் வெளியிலை கொண்டு வந்திருவன் இல்லாட்டில் இந்த நகரமே எரிஞ்சு சாம்பலாப் போகும் எண்டு ஆவேசப்பட்டுக்கொண்டு திரியிறாள்...

"அண்ணை!"
"ஓம்..."
"நீங்கள் எவ்விடம்..?"
"நானோ ஏன்..?"
"சும்மா கேட்டன்... எவ்விடம்?"
"புங்குடுதீவு!"
"புங்குடுதீவிலை எந்தப்பக்கம்?"
"கிழக்கூர்!"
"கிழக்கூரிலை?"
"கண்ணகியம்மன் கோயிலுக்கு முன்னாலை...!"
"அதுதானை பார்த்தன்... இதுமாதிரிக் கதையெல்லாம் நீங்கள்தான் எழுதுவியள்... அண்ணை. சும்மா கண்ணகி கதையை மாத்திமாத்தி எழுதாமல் புதுசாய் ஏதும் எழுதுங்கோ!"
"கண்ணகி கதையா?"
"பின்னை...? உங்கடை கதாநாயகி கண்ணகி... புருஷன் கோவலன்... கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போனபெட்டை மாதவி...!"
"அப்ப நான் கொப்பியடிக்கிறனெண்டு சொல்லுறீர்?"
"இல்லை மாத்தி எழுதுறீங்கள் எண்டு சொல்கிறன்!"
"சரி விடும்... இனி நான் ஒண்டும் எழுதேல்லை..."
"இது நல்லது... கையைக் காலைச் சும்மா வைச்சுக்கொண்டு வாயை மூடிக் கொண்டிருக்கிறதுதான் புத்திசாலியளுக்கு அழகு..."

நான் பேனாவை மூடி ஒருபுறம் வைத்தேன்...
'என்னை எழுது... என்னை எழுது' என்று அனுபவங்கள் அரிக்கின்றன.
ஏன் சோலி?
சும்மாயிருத்தலே சுகமாம்! - சொல்கிறார்கள்.
ஓம்!

000
(யாவும் சத்தியமாய்க் கற்பனை)




(பிரசுரம்: ஆதவகிருஷ்ணா கலைமன்ற 2வது ஆண்டுவிழாமலர் 1995)

Samstag, Oktober 04, 2008

எழுத்துவேலை














-இந்துமகேஷ்






அதென்ன பெரிய வேலையே?!
சும்மா ஒரு கொஞ்சநேரம் சோம்பலா ஒரு பக்கத்திலை குந்திக்கொண்டு... வீட்டு முகட்டைப் பார்த்துக்கொண்டு அல்லது வீதியைப் பார்த்துக்கொண்டு நாடியிலை அல்லது கன்னத்திலை கைவைச்சுக்கொண்டு ஆரைப்பற்றியாவது அல்லது எதைப்பற்றியாவது மண்டைக்குள்ளை போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தால்
கொஞ்ச நேரத்திலை ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை அல்லது ஒரு கவிதை!
அது எல்லாரும் செய்யக்கூடிய வேலைதான்.

எனக்குமட்டும் ஏலாதா என்ன?
நானும் வந்து பத்துவருசமாச்சுது. என்னட்டை எவ்வளவு விசயங்கள் இருக்கும்?
எண்டாலும் எனக்கு இதுகளிலை அவ்வளவாய் ஈடுபாடு கிடையாது. ஆனால் சிகரட்டு மாதிரி அடிக்கடி கிடைக்கிற நேரமெல்லாம் படம் பார்க்கவேணும்.
அதையும்விட்டால் என்ன ஒரு பொழுதுபோக்கு?

சும்மா நெடுக வேலை வேலை எண்டு அடிச்சுக் குடுத்திட்டு வந்தால் ஒரு மாற்றம் வேணும் எண்டதுக்காகத்தான் படம் பார்க்கிறது.
மற்றப்படி இந்தக் கதை கவிதை கட்டுரை எண்டு இதுகள் எனக்கு அவ்வளவாய் ஒத்துவாறேல்லை.

உருப்படியாய் ஒருவேலையும் செய்யத் தெரியாதவை கனபேர் இங்கை கதை எழுதுகினம். ரெண்டு வருசத்துக்கு முந்தி வந்த சின்னச் சின்னப் பெடியங்கள் எத்தினைபேர் நாய்பூனைக் கொம்பனியளிலை வேலையும் பென்ஸ்கார்களும் எண்டு எவ்வளவு வடிவாய்த் திரியிறாங்கள். அவங்களைப் பார்த்தாவது புத்திவரவேணாமே!

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கிறார் எங்கடை "ஸ்ரட்"டுக்குள்ளை..
அவரோடைதான் நான் கொஞ்சக்காலம் பழகினனான். மற்றும்படி எங்கடை ஆட்களை அவ்வளவுதூரம் எனக்குப் பிடிக்கிறேல்லை. எவ்வளவு திறமான ஆட்கள் எண்டு நீங்கள் பழகினாலும் ஒருநாளைக்கு அவையள் தங்களின்ரை விளையாட்டைக் காட்டிப்போடுவினம். அதாலை அதிகமாய் நான் ஒதுங்கிப் போயிருகிறது.
ஆனால் இந்த எழுத்தாளர்மட்டும் கொஞ்சம் வித்தியாசம். ஆரோடையும் நல்லாச் சிரிச்சுக் கதைக்கிற மனிசன். ஆனால் அந்தாளிட்டை எனக்குப் பிடிக்காத ஒரு விசயம்-
எப்ப பார்த்தாலும் பேப்பரும் பேனையும்.
என்னத்தை எழுதி... என்னத்தைக் கிழிச்சு...?
இப்பிடிக் கதை எழுதிறநேரத்திலை எங்கையேனும் போய்க் கூட்டிக் கழிச்சாலாவது கையிலை கொஞ்சக் காசு புரளும். அந்தாளுக்கு அந்தச் சிந்தனையே இல்லை.
பெண்சாதி பிள்ளையள் ஊரிலை கஷ்டப்படுகுதுகளோ என்னவோ.. இங்கை இந்தாள் சும்மா எழுதிக்கொண்டு திரியுது!

சில நேரங்களிலை என்ரை வாழ்க்கையும் எனக்கு விசர்த்தனமாய்த் தெரியும்.
விடிஞ்சாப் பொழுதுபட்டா செக்குமாடுகள்மாதிரி சுத்திச் சுத்தி ஒரே ஓட்டம்தான்.
வீடு...வேலை! வீடு... வேலை!
வேலை முடிஞ்சு வீட்டை வந்தால் வீட்டிலை என்னவேலை?
நித்திரை கொள்ளுறதுதான்.
விடிஞ்சு எழும்பி பஸ்ஸைப் பிடிச்சுக்கொண்டு ஓடினால் ஒண்டரை மணித்தியாலத்திலை வேலை செய்யிற இடம் வந்திடும். அங்கை நிண்டு மாரடிச்சிட்டு இடையிலை வாற அஞ்சு பத்து நிமிச ஓய்வுக்கிடையிலை இரண்டொரு சிகரட்டை ஊதி ஒண்டிரண்டு கோப்பியைக் குடிச்சிட்டு பிறகு தொடர்ந்து முறிஞ்சிட்டு பின்னேரம் வீட்டை வந்தால்-
அடிச்சுப் போட்ட பாம்புமாதிரி உடம்பு சுருண்டுபோம்.

வந்தகாலத்திலை துவங்கின வேலை இன்னும் முடிஞ்சபாடில்லை.
உழைச்சு உழைச்சு ஓடாய்ப் போனதுதான் மிச்சம்.
(வெளிப்பார்வைக்கு நான் வாட்டசாட்டம்தான் ஆனால் ஓடாய்ப்போனதெண்ட உதாரணம் உடம்புக்குள்ளை இருக்கிற களைப்புக்கு)
உடம்புக்கு ஏலாதெண்டு சும்மா வீட்டிலை கிடக்கேலுமே?
வீட்டுவாடகை, கரண்ட் பில், தண்ணி பில், டெலிபோன் பில் எண்டெல்லாம் எத்தினை தேவையள்?

ஒருநாளைக்கு வேலைக்குப் போகாட்டில் துலைஞ்சம்.
சரி இப்பிடி உழைச்சுத்தான் என்னத்தைக் கண்டமெண்டால் ஒண்டுமில்லை.
வாழ்க்கையிலை ஒரு சந்தோஷமும் இல்லை.
சந்தோஷம் எண்டு என்னத்தைச் சொல்லுறது? ஒண்டிலை சந்தோஷம் எண்டு தொடங்கினால் சந்தோஷம் வேறை ஒண்டிலை இருக்கிறமாதிரித் தெரியுது.
ஊரைவிட்டு ஓடிவரேக்கை ஓடித் தப்பினால் காணுமெண்டுமட்டும்தான் மனசிலை பட்டுது. இங்கை வந்து காம்ப்பிலை காயேக்கை ஊரிலையே இருந்திருந்தால் சந்தோஷமாய்ச் செத்திருக்கலாம் எண்டதுமாதிரி இருந்துது.

பிறகு ஒருமாதிரி நிமிரத்தொடங்க...
ஆசையள்...!
அப்பிடி இருக்கவேணும் இப்பிடி இருக்கவேணும் எண்டு மனம் அலைஞ்சுது.
தனிய இருக்கிறபோது கலியாணம் முடிச்ச ஆக்களெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறமாதிரித் தெரிஞ்சுது.
கலியாணம் முடிச்ச பிறகு தனிய இருக்கிற ஆக்களெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறமாதிரித் தெரியுது.
எனக்குக் கலியாணமாகி மூண்டு வரியத்திலை நாலு பிள்ளையள்.( ஒருக்கால் ரெட்டையாப் பிறந்ததாலை நாலு)
இப்ப எல்லாம் கேளாக் கேள்வி கேக்குதுகள்.
திருஞானசம்பந்தர் மூண்டுவயசிலை தேவாரம் பாடினதெண்டால் நம்ப மறுத்த கனபேர் இருக்கினம். என்ரை வீட்டை வந்து பார்த்தால் ரெண்டுவயசிலை இதுகள் கேட்கிற கேள்வியளுக்கு அவையள் பதில் சொல்லேலாது.

பிறந்த நாலிலை ஆம்பிளைப் பிள்ளையள் கிடையாது.
வெளிநாட்டுக்கு வந்து ஊர் விசயங்கள் கனக்க விட்டிட்டம். -சீதனத்தைத் தவிர.
இப்ப எனக்கு நாப்பது தாண்டிவிட்டுது.. என்ரை அறுவதிலை என்ரை பெட்டையள் குமரியளா நிக்குங்கள். அப்ப சீதனம் ஞாயமாத் தேவைப்படும்.
அதுக்கும் இப்பவே சேர்த்து வைச்சாத்தான் நல்லதெண்டது என்ரை மனிசியின்ரை ஓடர்!
மனைவி சொல்லே மந்திரம்.
எப்பிடியும் பெஞ்சன் எடுக்கமுதல் பிள்ளையளுக்கு ஏதேனும் சேர்த்து வைக்கவேணும். கடமையை விட்டிரப்படாது.

எங்களுக்கு முந்தின தலைமுறையிலை எல்லோரும் ஏதேனும் ஒரு ஒழுங்குமுறையிலை வாழப் பழகிச்சினம்.
இப்ப ஒரு ஒழுங்கு கிடையாது.
இதிலும் வெளிநாட்டு வாழ்க்கையிலை ஒரு திட்டத்தோட வாழேலாது. ஒரு காலைக் கீழை வைச்சுக்கொண்டு ஒரு காலை மேலை தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடுறதுக்குத் தயாரா இருக்கவேணும்.
எப்ப நாட்டைவிட்டு ஓட வெளிக்கிட்டமோ நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறம்.
ஒரு இடமும் நிரந்தரமில்லை எண்டால் எங்கை ஓடிறது?
ஆனால் துணிஞ்ச சனம் ஓடிக்கொண்டுதான் இருக்குது.

வந்த புதிசிலை குட்டிபோட்ட பூனைமாதிரி ஐரோப்பாவுக்குள்ளையே சுத்திச் சுத்தி ஓடின சனம் இப்ப கண்டம்விட்டுக் கண்டம் பாயுதுகள். எங்கையாவது நிரந்தரமாய் நிண்டிருவம் எண்டுதான்.
அப்ப, இப்ப இங்கினை கிடைக்கிறதும் இத்தனைநாளாய்க் கிடைச்சதுகளிலையும் ஒரு சந்தோஷமும் இல்லை.
புதுப்புது இடங்களுக்கு ஓடிப்போனாலாவது சந்தோஷம் வந்திடாதா எண்டு ஒரு ஆசைதான்.
சந்தோஷம் எண்டது என்னத்திலையிருந்து வருகுது எண்டு ஆருக்கும் விளங்குதில்லை.

புதிசா ஒண்டைக் கண்டா அதிலை ஆசை வருகுது. அது கையிலை கிடைச்சாச் சந்தோஷம் வரும் எண்டமாதிரி ஒரு பிரமை. ஆனால் விரும்பினது கிடைச்ச உடனை அதிலை தெரிஞ்ச சந்தோஷமெல்லாம் இல்லாததுமாதிரித் தெரியுது. இதைவிடப் புதிசாய் ஒண்டைக் கண்ட உடனை சந்தோஷம் அதிலை இருக்கிறமாதிரித் தெரியுது. அதாலைதான் ஒருகாலைத் தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு நிக்கிறமாதிரி நிக்கவேணும். வசதி கிடைச்சா ஓடியிரவேணும். ஆர் கண்டது ஒருவேளை போற இடத்திலை அவைக்குப் புதுச் சந்தோஷம் வந்தாலும் வரும்.

உண்மை என்னெண்டால் இவைக்கு நாட்டுக்குப் போக விருப்பமில்லை. ஆருக்குத்தான் விருப்பம் விரும். அங்கை சண்டை நடக்குது நடக்கேல்லை எண்டதுகளை விடுவம். சண்டை தீர்ந்தாலும் ஆரும் போக விரும்பேல்லை. அதாலைதான் இந்தக் கண்டப் பாய்ச்சல்.
பிள்ளைகளைப் படிக்கவைக்கப் போகினமாம். கனடாவிலையும் அமெரிக்காவிலையும் தமிழ் அந்தமாதிரி வளர்ந்திருக்கெல்லே. அதால ஜெர்மன் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட்டிட்டு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் போகினம். நானும் போகலாம் எண்டுதான் பார்க்கிறன். இல்லாட்டில் என்ரை பிள்ளைகளின்ரை எதிர்காலமும் பழுதாப் போயிடும். எதுக்கும் பிள்ளையள் கொஞ்சம் வளரட்டும். போவம்.

இடையிலை போனகிழமை ஒரு ரெஸ்ரோரன்ட் எடுக்கிறதுக்கு அட்வான்ஸ் குடுத்திட்டன். நெடுக இன்னொருத்தனுக்குக் கீழையே கிடந்து முறிகிறதிலை என்ன வரப்போகுது? அதாலைதான் கிடந்த காசை வைச்சு சின்னதாய் ஒரு ரெஸ்ரோரன்ட்.
ஆனால் மறந்தும் எங்கடை ஆக்களை வேலைக்கு எடுத்திடப்படாது. எடுத்தால் கதை சரி. ஒண்டுக்குப் பத்தாய் யாழ்ப்பாணம் கோட்டல்தான்.

ஆரோ பெல்லடிக்கிற சத்தம் கேட்குது
எழுந்துபோய்க் கதவைத் திறந்தால்-
எழுத்தாளர்!

"என்னண்ணை கனகாலத்துக்குப் பிறகு..?"
"சும்மாதான் தம்பி!"
"உள்ளுக்கை வாங்கோ!"
"இல்லைத்தம்பி நான் போகவேணும்!"
சொல்லிக்கொண்டே வெளியில் நின்றபடி உள்ளே வீட்டை நோட்டம் விடுகிறார் அவர்.
"ஒருத்தரும் இல்லையண்ணை! மனிசி பிள்ளையள் வெளியிலை போயிருக்கினம்.!"
"ஒண்டுமில்லைத் தம்பி...உம்மட்டைத்தான் ஒரு அலுவலாய் வந்தனான்..!"
"சொல்லுங்கோ அண்ணை!"
"நீர் ஒரு ரெஸ்ரோரன்ற் எடுத்திருக்கிறீராம்!"
"ஓமண்ணை!"
"அதிலை..அதிலை.. எனக்கும் ஒரு வேலை போட்டுத் தாருமன்!"

அவர் இப்படிக் கேட்பாரெண்டு ஆருக்குத் தெரியும்.
"என்னண்ணை திடீரெண்டு... ? உங்கடை கதை எழுதிற வேலை என்னாச்சுது?"
"அது சும்மா பொழுதுபோக்குத்தானை தம்பி.. அதாலை என்ன வரப்போகுது..? ஆம்பிளையாப் பிறந்தவன் ஏதாவது ஒரு வேலைவெட்டி பாக்கவேணும்!"
"அப்ப கதை எழுதிறது ஒரு வேலை இல்லையே?"
"அது என்ரை ஆத்ம திருப்திக்காக எழுதிறது தம்பி! கோயில்லை போய்ச் சாமி கும்பிடுகிறம். அது நமக்குச் சம்பளமா தருகுது..? ஏதோ எங்கடை மனத் திருப்திக்குக் கும்பிட்டிட்டு வாறம்... அதுமாதிரித்தான் கதை எழுதுகிறதும். எங்கடை மொழிக்கு நாங்கள் ஏதேனும் செய்தமெண்ட ஒரு சந்தோஷம்!"
"ஆனால் பாருங்கோ அண்ணை.. என்ரை ரெஸ்ரோரன்டிலை உங்களுக்கு ஏற்றதாய் ஒரு வேலையும் இல்லை!"
அவர் என்னை ஒரு மாதிரிப் பார்க்கிறார்.
"சரி தம்பி நான் வேறை எங்கையாவது விசாரிக்கிறன்.!"

கதவைத் தாழிட்டுவிட்டு வந்து இருக்கையில் சாய்கிறேன்.
மனம் பெரிதாய் அந்தரப்படுகிறது.
எதைச் செய்தும் பணத்தைச் சம்பாதித்துக்கொள்ளலாம்..
ஆனால் ஆத்ம திருப்தியை..?
எழுத்தாளரிடம் அது நிறையவே இருக்கிறது.
அதை அவர் ஒரு வேலையாக எண்ணாதவரை!


000


( பிரசுரம்: வெற்றிமணி ஆனி 1995 )